நீதிமன்றத் தீர்ப்பை உதாசீனம் செய்து கூரகலவில் பள்ளிவாசலை அமைத்தவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென வலியுறுத்தும் பொதுபல சேனா பெளத்த குருமார் மீதான தாக்குதலை கண்டிப்பதோடு இப் பிரச்சினை தொடர்பாக அரசு நியாயத்தை பெற்றுக் கொடுக்க தவறிவிட்டதாகவும் தெரிவித்தது.
இது தொடர்பாக பொதுபல சேனாவின் நிர்வாகப் பணிப்பாளர் டிலந்த விதானகே மேலும் தகவல் தருகையில்,
கூரகல பிரதேசம் 2000 வருடங்களுக்கு மேலாக வரலாற்று முக்கியத்துவமிக்க பெளத்த சின்னங்கள் காணப்பட்ட இடமாகும்.இதனை தொல்பொருள் திணைக்களம் ஏற்றுக்கொண்டுள்ளதோடு அங்கீகரித்துள்ளது.
அங்கு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பள்ளிவாசல் கட்டப்பட்டிருக்கலாம். அதனை ஏற்றுக்கொள்ள முடியாது.ஏனென்றால் ஆங்கிலேயர் காலத்தில் தொல் பொருள் ஆராய்ச்சி சட்டங்கள் பின்பற்றப்படவில்லை.இப்பிரச்சினை தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதோடு கூரகலவிலிருந்து பள்ளிவாசலை அகற்றி வேறொரு இடத்தில் அமைப்பதற்கான தீர்வை நீதிமன்றம் வழங்கியது.
அதற்கான மாற்றுக்காணியும் வழங்கப்பட்டது.ஆனால் இத்தீர்ப்பை மீறி கூரகலவில் பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது.
இது நீதிமன்றத்தீர்ப்பை அவமதிக்கும் செயலாகும். ஆகவே மதிப்புமிக்க இவ்விடத்தை முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பதற்கு இடமளிக்க முடியாது.
தொல்பொருள் ஆராய்ச்சி சட்டங்களையும், நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி முஸ்லிம் பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது.எனவே இதனை நிர்மாணித்தவர்களை கைது செய்ய வேண்டும்.
அதைவிடுத்து தேசிய உரிமைகளுக்காக குரல்கொடுத்த பெளத்த குருமார் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை கடுமையாக கண்டிக்கின்றோம்.
அரசாங்கம் இவ்விடயத்தில் அசமந்தப்போக்கை கடைப்பிடித்துள்ளது.எனவே இவ்விடயத்தில் அரசு தலை யிட்டு நியாயத்தை பெற்றுகொடுக்க வேண்டுமென்றும் டிலந்த விதானகே தெரிவித்தார்.