(கால ஓட்டத்துடன் ஒன்றிய ராஜதந்திரங்களும் தற்காப்புக்கான நகர்வுகளும்)
எந்த ஒரு செயல்பாடாக இருந்தாலும் அதன் உடன்பாடும் எதிர்மரையும் அந்தந்த கால ஓட்டத்தின் கருத்துவயப்பட்ட நிலையில் நின்று அணுகப்படும்போதே அதன் சாத்தியநிலை காலநிலைச் சூழலை தனக்கு சாதகமாக உருவாக்கி நிற்கும்.இது அரசியலில் மட்டுமல்ல சமூக சிவில் ராணுவ ஒழுங்கிலும் பேணப்படும் ஒன்றே.
யமன் ஹூதிகளுக்கு எதிரான சவுதியின் யுத்தத்தை நோக்கும் பலர் எகிப்தில் முர்சிக்கு எதிரான சவுதியின் நிலைபாட்டில் நின்றே முரண்நிலையை நிறுவ வருகின்றனர்.ஒரு நாட்டின் இரண்டு வேறுபட்ட நிலைபாடுகளை சமநிலைப்படுத்தி பார்க்கவோ அல்லது ஒரு நிலைபாட்டை இரண்டு காலப்பகுதியிலும் இரண்டு பௌதீக சூழலிலும் உள்ளவற்றை வேறுபிரித்துபார்க்கவோ தேவையான அளவுகோள்கள் பண்பியல்புகள் இருக்கிறதா என்பதை இனம்கண்டே அதை நிறுவ முடியும்.
பக்கத்து வீட்டுக்கு கொடுக்கும் அதே சம அளவு அக்கறையை பத்துவீடு தூரம் இருக்கும் வீட்டுக்கும் கொடுக்க சொல்லும் கோரிக்கைகளும்,வீட்டு வளாகத்தை சுற்றி சுவர் எழுப்புவதை ஏன் ஊருக்கே சுவர் எழுப்பவில்லை என்று கேட்பதும் அரசியல்புலத்தில் நின்று பேசப்படும் அங்கீகார பேச்சாடல் ஒழுங்குக்கு அப்பால்பட்ட சாடல்களே தவிர வேறில்லை.இது அரசியல் ஒழுங்கிலும் பிழையான நிலைப்பாடே.இஸ்லாமிய நிலையில் நின்று பார்த்தாலும் பிழையான நிலைபாடே.
சவுதியின் சாத்வீக அரசியல் பின்னணி,ஈரானின் அதிரடி ஆதிக்க அரசியல் நகர்வு,எகிப்திய அரசியல் களம் என்ற முக்கோணதேச காலச்சூழல் வயப்பட்ட அனுபவகாரணிகளை யமனில் நிலை நிறுத்தி பார்ப்பதன் ஊடாகவே ஒட்டுமொத்த முரண்நிலைகளையும் விளைவுகளையும் ஒட்டிச் சமநிலை செய்ய முடியும்.
ஈரானின் பின்னணியும் விளைவுகளும்
மத்திய கிழக்கில் ஈரான் ஏற்படுத்திவரும் குழப்பங்கள், துண்டாடல்கள்,அரசியல் சண்டித்தனங்கள்,அயோக்கியத்தனங்கள் எல்லாம் அமைதிவழியில் நின்றே சன்னி நாடுகளால் அணுகப்பட்டு வந்தது.லெபனானில் ஹிஸ்புல்லாவின் ஆதிக்கம்,ஈராக்கில் அமெரிக்காவுடன் ஈரானின் கூட்டணி,சிரியாவில் ஈரானின் நேரடி ஆக்கிரமிப்பு என்பன அந்த நாடுகளில் ஈரானுக்கு நல்ல பெயரை எந்த இஸ்லாமிய அமைப்புக்களிலும் ஏற்படுத்தவில்லை என்ற உண்மையை உலகம் கண்டும் காணாமல்தான் வந்துள்ளது.
இதுதவிர பஹ்ரைன் அரசுக்கு எதிராக ஷீஆக்களை தூண்டிவிடும் வேலைகள்,வளைகுடாவில் சில கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த “பாபுல் மந்திப்” போன்ற கேந்திர முக்கியத்துவம் கொண்ட கடல்மார்க்க தளங்களை கைப்பற்றுதல்,ஐக்கிய அரபு இராட்சியம் போன்ற நாடுகளை அச்சுறுத்தலில் அடிபணிய வைக்க முயற்சித்தல் என்ற பல எதிர்கால திட்டவரைபை மைய்யப்படுத்திய அராஜகங்களை ஈரான் நேரடியாகவும் மரைகரமாகவும் நின்று செயட்படுத்தி வந்துகொண்டே உள்ளது.இதனை சவுதியும் வளைகுடா நாடுகளும் அமைதிநிலையில் நின்றே வரலாறு நெடுகிலும் அணுகியும் வந்தன.
இவை எல்லாம் ஈரான் மத்திய கிழக்கில் ஏற்படுத்திய சண்டித்தனமும் அரசியல் நகர்வுகளும் ஆகும்.இது தவிர பாகிஸ்தான் கருப்பு சந்தையில் பெறப்பட்ட யூரேனிய செறிவூட்டலுக்கு தேவையான நவீன கருவிகள் மூலம் மிகவும் பலயீனமான யூரேணிய செறிவாக்கல் திட்ட நாடகத்தின் ஊடாக மத்திய கிழக்கில் பதட்ட நிலையை உருவாக்கி மேற்கின் கவணஈர்ப்பு,கண்காணிப்பு எனும் தொனியில் மத்திய கிழக்கில் மேற்கு நாடுகளை கங்காணி இட்டு ஆதிக்கத்தை ஊடுருவ செய்தல் ஊடாக மக்களை மேற்குக்கு எதிரானவர்கள் போன்று தூண்டி உள்நாட்டு ராணுவ பின்புலம் உள்ள அரசியலுக்கும் சிவில் மக்களுக்கும் இடையில் குழப்பங்களை ஏற்படுத்தி அதில் ஆயுத குழுக்களை ஏற்படுத்துவதே ஈரானின் பரம்பரை மரபுவழி தொழிலாக அமைந்து வந்துள்ளது. இதன் ஊடாக மத்தியகிழக்கு ராணுவ பலத்தை பலஈனமாக்குதல் என்ற நீண்டகால திட்டத்தில் மேற்கும் ஈரானும் இருவேறு தளங்களில் நின்று கூட்டு வெற்றியை பங்குபோடுவதே உண்மை.
இதற்கு உதாரணமாக ஈராக்,சிரியாவிலும் அதன் தொடர்ச்சியில் யமனில் ராணுவத்தை பிரித்தாண்டு நாட்டை பலஈனமான சூழலுக்கு கொண்டு சொல்வதோடு தென்லெபனானில் இஸ்ரேலை சாட்டாக சொல்லி லெபனானின் அரசியல் தலைவிதியை நிர்ணயிக்கும் குழுவாக “ஹிஸ்புல்லாவை” மாற்றியமை,ஈரானில் சதாம் ஹுசைன் ஆதரவாளர்களுக்கு எதிரானவார்கள் என்று சொல்லி ஷீஆ ஆயுத குழுக்களை உருவாக்கியமை என்பன மேலதிக முன்னுதாரணமாக சொல்ல முடியும்.
சவுதியின் உள்நாட்டு வெளிநாட்டு அரிசயல் கோட்பாடு
சவுதியை பொறுத்தவரை மன்னர் ஸுவுத் குடும்ப ஆட்சிக்கு அச்சுறுத்தலாக உள்நாட்டில் உள்ள சன்னிகளாக இருந்தாலும் சவூதி அதை விட்டுவிடப்போவதில்லை.சன்னி முஸ்லிம்கள் பற்றிய நிலைப்பாட்டிலேயே சவுதியின் போக்கு கடுமையாக இருக்கும் நிலையில் ஷீஆ ஆதிக்கம் சவுதியிலோ அதன் எல்லையிலோ இருப்பதை சவுதி ஒருபோதும் விரும்பாது.இதை வேறு எந்த அரசும் இவ்வாறே நோக்கும்.ஆட்சியை தக்க வைத்தல் என்பது இஸ்லாமிய அரசியலில் இருந்தும் கிலாபா ஆட்சி என்று அறியப்பட்ட அரசியலில் இருந்தும் இந்த கருத்துருவாக்கல் மூலமே புரியப்பட்டும் வருகிறது..இது சவுதிக்கு மட்டும் உள்ள விசேட பண்புகள் அல்ல.எனவே ஆட்சியை தக்க வைக்கவே அவர்கள் யுத்தமும் செய்கின்றனர் அமைதியும் காக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு “புதிய உலக ஒழுங்கில்” மட்டுமல்லாது தொன்றுதொட்டு வந்த மரபாகவும் உள்ளது.இதை ராஜதந்திரம் என்றும் சொல்லுவர் சாணக்கியம் என்றும் சொல்வர்.
இதை கருத்தில்கொண்டு சவுதியின் வெளிநாட்டு அரசியல் நகர்வுகள் எப்படியான பண்பியல்புகள் கொண்டது என்பதை நோக்குவோம்.சவூதி தனது வெளிநாட்டு கொள்கையில் எப்போதும் சமநிலையுடனேயே நடந்துவருகிறது.சிலபோது அதன் அறிக்கைகள் காரமாகவும் பலபோது அமைதியாகவும் இருந்தாலும் செயற்பாட்டு ரீதியில் அதன் நகர்வு அமைதி,சாத்வீக நகர்வே.ஈரானுடன் ஒப்பிடும்போது ஈரானின் வெளிநாட்டு உதவிகள் அரசியல் ஆதிக்க குழுவை உருவாக்கும் எண்ணவோட்டத்தில் நின்றே இருக்குமே தவிர அமைதிவழியில் எங்கும் எப்போதும் இருந்ததில்லை.இது பற்றிய தகவலை மேலே ஈரான் பற்றிய தலைப்பில் அலசியும் உள்ளேன்.ஆனால் இதே பண்பு ஒழுங்கை சவுதியின் அரசியல் நகர்விலோ அறிக்கையிலோ காண முடியாது.சவுதியின் நிதி உதவிகள் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு செல்கிறது.இவை எதுவுமே சவுதியின் அரசியல் ஆதிக்க நிலையை முன்னிருத்தியதாக காணமுடியாது.மாறாக வெறும் அகீதா சார்ந்த சிந்தனை சார்ந்த உதவியாக பல இடங்களிலும் மனிதாபிமானம் சார்ந்த உதவிகளாக சில இடங்களிலும் காண முடியுமாக இருந்துள்ளது.
எகிப்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றமும் சவுதியின் வகிபாகமும்
முர்சியின் ஆட்சி ஏன் வீழ்ந்தது என்ற தலைப்பில் பல கட்டுரைகள் பதிவுகள் எழுதியுள்ளேன்.அவற்றில் முர்சியின் ஆட்சி வீழ்வதிலோ முபாரக் ஆட்சி வீழ்வதிலோ சவூதி நேரடியாகவோ மறைமுகமாகவோ பங்காற்றவில்லை என்பது நிதர்சனமான உண்மை என்பதை அழுத்தி சொல்லி உள்ளேன்.முபாரக்கே சவுதியின் நண்பனாக இருக்கும்போது அவரை காப்பாற்ற வேண்டிய சூழல் இருந்தும் சவூதி அதில் தலையிடவில்லை.காரணம் சவுதியின் வெளிநாட்டு கொள்கை அரசியல் ஆதிக்கத்தை குழப்பங்கள் ஊடாக அணுகவது கிடையாது.முபாரக் ஆட்சியும் வீழ்ந்தது முர்சி அரசும் வந்தது.எகிப்துக்கு செய்யும் உதவிகள் முர்சி அரசுக்கும் செய்யப்பட்டன.இது ஆட்சியில் இருப்பவர்கள் சார்புநிலையில் நின்று கொடுக்கபடும் உதவி அல்ல.முர்சிக்கான உதவியும் அல்ல.இது அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருக்கும் நாட்டின் பொருளாதார சிவில் ஒழுங்கை நேர்நிமிர்த்த தேவையான உதவியாகவே இருந்துள்ளது.இந்த அடிப்படையில் முர்சி ஆட்சிக்கு வருவதிலோ அவர் வீழ்ந்ததிலோ சவுதியின் வகிபாகம் எதுவும் இல்லை.முர்சிகு கொடுத்தது போன்ற உதவியை முர்சிகு பின் வந்த அரசுக்கும் உதவியது.யார் ஆட்சியில் இருக்கிறார் என்ற பாரபட்சம் இன்றி ஸீஸீ அரசில் சிவில் சமூகத்தை கருத்தில்கொண்டு செய்யும் உதவியை முர்சிகு எதிரான உதவியாகவோ முர்சி ஆட்சியில் சிவில் சமூகத்துக்கு செய்த உதவியை ஸீஸீ அணிக்கு எதிராக செய்ததாக சொல்வதும் எகிப்துக்கும் சவுதிக்குமான நீண்டகால வரலாற்றை வாசிப்பின்றி வைக்கும் குற்றச்சாட்டே ஆகும்.
வெளிநாட்டு உதவிகள் ஊடாக சவுதியின் ராஜதந்திரம்
வெளிநாட்டு அரசியலில் சவுதி எப்போதும் சேற்றில் நாட்டிய கம்பு போல தழும்பி,தத்தளித்து உள்நாட்டு பதட்ட நிலையை முடிவுக்கு கொண்டுவர தேவையான ராணுவ,பாதுகாப்பு பலத்தை இழந்து நிற்கும் ஒரு சிறு குழுவின் அரசை நிமிர்த்தி எடுக்கும் வேலைகளை செய்வதில்லை.ஆப்கானில் தாலிபான் அரசுக்கு தேவையான உதவிகளை செய்துவந்த சவூதி தாலிபான்களின் இறுதிக்கட்ட நிலையை கருத்தில் கொண்டு அதன் விபரீதம் அறிந்து ஆப்கானில் இருந்து தன்னை பின்வாங்கி கொண்டது.தாலிபான்கள் ஆட்சியில் ஓரளவு பலமாக இருந்தால் அதற்கு ஒரு நிலைபாடும் பலம் இழந்து சிறு குழுவாக நின்றால் அதற்கு ஒரு நிலைபாடும் சவூதி எடுத்துள்ளது.ஒரு நாட்டின் அரசியல் தலைவிதியை நிலைநிறுத்தும் நோக்கத்தில் இருந்து விடுபட்டு பலமாக ஆதிக்கம் செலுத்தி இருகின்ற அரசுக்கு உதவுவது என்பதே அதன் நிலைபாடு.அந்த அரசு இருந்தால் உதவுவது இல்லை என்றால் வருகின்ற அரசுக்கு உதவுவது.இதுவே அதன் நிலைபாடு.அதன் உதவியால் அரசாங்கம் மாறுவது அல்லது வீழ்வது என்ற எதுவும் நடப்பதில்லை.இதுவே எகிப்திலும் நடந்தது.சவூதி ஸீஸீக்கு உதவா விட்டால் முர்சி அரசுடன் ராணுவம் நின்றிருக்குமா?இல்லவே இல்லை.ராணுவம் காவல்துறை அனைத்து சிவில் நிர்வாகமும் முர்சிகு எதிராகவும் இக்வான்கள் என்ற பலம் இழந்த குழு முர்சியுடனும் நின்ற சமநிலையற்ற இரண்டு எதிர்தரப்பில் வலுநிலை கூடிய தரப்பு ஆதிக்கம் செலுத்தியது.இந்த நிலையை சவூதி கொடுக்கும் ஒரு தொகுதி பணம் மாற்றிவிடப்போவல்லை.
முர்சியையோ முபாரக்கயோ வீழ்த்த ராணுவத்துக்கு வெளிநாட்டு உதவி தேவையே இல்லை.முப்பது வருடங்கள் எகிப்தை கட்டிக்காத்த முபாரக்கே சவுதியிடம் உதவி பெற முடியாத போது முர்சி எம்மாத்திரம்?முபாரக் வீழ்வதற்கு தேவையான எல்லா சூழ்நிலைகளும் முர்சி வீழ்வதில் பங்காற்றின என்பதே உண்மை.இதில் முர்சி அணி முபாரக்கைவிட மிகவும் பலம் இழந்த சிறு குழு என்பது எதிர்மறையான விசேட அம்சமாகும்.
மத்திய கிழக்கு நாடுகளில் உள்நாட்டு குழப்பங்களை தூண்டிவிடும் ஈரானின் செயல்திட்டத்துக்கு எதிராக சவுதி பதட்டநிலை இல்லாத நிரந்தர அரசு ஒன்று இருக்க வேண்டும் என்பதையே விரும்பிகிறது.அதில் இருப்பவர்கள் ஸலபி,சூபி,ஜனநாயகவாதி,சர்வாதிகாரி என்ற வேறுபாடுகளை தாண்டி நாட்டில் ஈரானும் மீட்கும் விரும்பும் பித்னாக்கள் வரக்கூடாது என்ற எண்ணமே சவுதியின் ராஜதந்திர நகர்வுகளில் மேலோங்கி நிற்கும்.சவூதி குழுக்களுக்கு நிறுவனங்களுக்கு செய்யும் உதவிகள் அகீதா சார்ந்த உதவியாகவும் அரசுக்கு செய்யும் உதவிகள் அரசின் ஊடான சிவில் நிலையை நிலைநிருத்தவுமே என்ற இருவேறுபட்ட நிலை ஆதிக்க நிலையை பிரதிபலிப்பதில்லை.
யமன் தீவிரவாதிகளுடன் நடக்கும் சண்டை உள்நோக்கமா?
யமன் ஹூதிகள் ஈரானின் வழக்கமான செயற்பாட்டின் பின்னனியில் இருந்து வளர்க்கப்பட்ட ஆயுத கும்பல் என்பதிலும் அவர்கள் நாட்டுப்பற்றுள்ள நாட்டின் நன்மை கருதிய தேசியவாதிகளா இல்லை ஈரானின் கொமைனியின் ஆதரவாளர்களா என்பதை புதிதாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.ஷீஆ பின்னனியில் இயங்கும் தஃவா குழுவாக இருந்தாலும் ஆயுத குழுவாக இருந்தாலும் அவர்கள் எந்த நாட்டை சேர்ந்திருந்தாலும் அவர்கள் தேசிய பாதுகாப்பைவிட நாட்டு பற்றைவிட ஈரானின் நேரடி ஆதரவாளர்களாகவும் கொமைனியின் சிந்தனையை விதைக்கும் குழப்ப நிலையை உருவாக்குபவர்களாகவுமே இருந்து வந்துள்ளார்கள் இருக்கவும் செய்கிறார்கள்.
தென்லெபனானில் ஆக்கிரமித்திருக்கும் ஹிஸ்புல்லா இயக்கத்தை எடுத்துகொண்டால் இஸ்ரேலுக்கு எதிராக நிற்பதாக சொல்வார்கள் ஆனால் அவர்கள் ஈரானின் நேரடி ஏவலில் சிரியாவிலும் போராடி முஸ்லிம்களை கொலை செய்யும் வேலையே செய்வார்கள்.லெபனானின் தேசிய பாதுகாப்புக்கும் விடுதலைக்கும்தான் இவர்கள் உருவாகி இருந்தால் இவர்கள் ஏன் சிரியாவில் உள்ள உள்நாட்டு சண்டையில் பஷாருடனும் ஈரானுடன் கைகோர்க்க வேண்டும்?ஈரானின் திட்டவரைபுகளின் ஒரு அங்கம்தான் இவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
எனவே ஷீஆ சிந்தனையில் எழுந்த போராட்ட குழுக்கள் ஈரானின் செயல்திட்டத்தை நிறைவேற்றவும் அவர்களின் குழப்ப அரசியலை ஏற்படுத்தும் நோக்கத்தை அடைந்து ஆதிக்கத்தை பெற்று அடுத்த நாடுகளுக்கு அச்சுறுத்தலை செய்வதும் ஈரானின் திட்டவரைபை நடைமுறைப்படுத்துவதுமே என்பதே உண்மை.
யமனின் சட்டபூர்வ அரசியலுக்கு ஆதரவாக போராடுவதும் முர்சியின் சட்ட பூர்வ அரசியலுக்கு ஆதரவாக போராடமையும் சவுதியின் இரட்டை நிலையா?இல்லை இருவேறுபட்ட சூழலில் எடுத்த இருவேறுபட்ட பண்பியல் நகர்வா?
இதற்கு இரண்டு பிரதான காரணங்கள் உள்ளன.
ஒன்று:யமனில் ஆதிக்கம் செலுத்தும் ஹூதிகள் சவுதியின் பாதுகாப்புக்கு அச்சுருத்தலானவர்கள் என்பதோடு வளைகுடா நாடுகளான கட்டார் பஹ்ரைன் குவைத் ஐக்கிய அரபுகள் ராஜ்யம் போன்ற நாடுகளுக்கும் அவர்களின் அச்சுறுத்தல் நீண்டகாலமாக இருந்துள்ளது.அது ஈரான் ஊடாகவோ அல்லது ஈரானின் உதவியுடன் ஆயுததாரிகள் ஊடாகவோ உள்ள அச்சுறுத்தலாகும்.இதனை சவூதி மட்டுமல்ல பிராந்திய நாடுகளும் ஏற்கப்போவதில்லை.எந்த ஒரு நாடும் தனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக எந்த ஆதிக்க சக்தியையும் விட்டுவிட மாட்டார்கள்.இந்த வகையில் தனது பாதுக்காப்பை கருத்தில்கொண்ட அடிப்படையில் சவூதி ஹூதிகளிடன் யுத்தம் செய்வதில் தவறே இல்லை.
இரண்டு:யமனில் புரட்சி அரசின் சட்டபூர்வ ஜனாதியான அப்து ரப்புஹு மன்சூர் பலகட்ட பேச்சுவார்த்தைக்கு ஹூதிகளை அழைத்தும் அதட்காக சவுதி முயட்சிகள் செய்தும் பேச்சுவார்த்தையை விட்டுவிட்டு ஆயுதமே தீர்வு என்று ஹூதிகள் சண்டித்தனம் காட்டியதால் யமன் ஜனாதியின் நேரடி வேண்டுகோளின் பேரில் சவுதியும் அதன் பத்து கூட்டணி நாடுகளும் யுத்தத்துக்கு சம்மதித்தன.
இப்படியான எந்த காரணங்களும் முர்சி அரசில் இருக்கவே இல்லை.முர்சி தனது ஆட்சிக்கு ஆதரவாக போராட வருமாறு ஒரு ஜனாதியாக இருக்கும் நிலையில் அழைக்கவில்லை.சவுதியுடன் காலாகாலமாக இக்வான்கள் நட்பில் இருக்கவும் இல்லை.எகிப்தில் சவுதியின் சவாலான ஈரானுக்கு உத்தியோக பூர்வ வாயலை திறந்துகொடுத்து எகிப்திய மக்களையும் பிராந்திய நாடுகளையும் பகைத்தார் முர்சி.இவை எல்லாம் முக்கியமான காரணமாக சவூதி பார்க்காவிட்டாலும் இன்னும் பல முக்கிய காரணங்கள் உள்ளன.
யமன் ஜனாதிபதியை காப்பாற்ற தேவையான முக்கிய காரணமும் அதில் முர்சி வேறுபடும் நிலைகளும்
சவுதியின் பௌதீக பிராந்திய எல்லை பாதுகாப்பு காரணிகள்
சவூதி கூட்டனி நாடுகளுக்காண உத்தியோக பூர்வ அழைப்பை யமன் ஜனாதிபதி வேண்டியமை
எல்லை பகுதி ஷீஆக்கள் வசம் சென்றால் சவுதிக்குள் இருக்கும் ஷீஆக்களுக்கும் ஆயுதம் செல்லும் நிலை
யமன் ஜனாதிபதி நாட்டு ராணுவத்தால் முற்றுகை இடப்படாமல் ஜனாதிபதியாக தொடர்ந்து இருக்கின்றமை
மேலே யமன் ஜனாதிபதி செய்த தந்திர யுக்திகளை முர்சி செய்யவும் சவுதியிடம் எகிப்திய ராணுவத்துக்கு எதிராக யுத்தம் செய்ய கோரவும் இல்லை.
மேலே கூறப்பட்ட எந்தவித தேவையான காரணிகளும் பண்பியல்புகளும் சூழல்களும் இல்லாத முர்சியின் ஆட்சிக்காக சவூதி உலகில் ரானுவபலத்தில் பத்தாவது இருக்கும் ராணுவத்தையும் காவல்துறையையும் சிவில் நிர்வாகத்தையும் எதிர்த்து சண்டை இடவேண்டிய எந்த அவசியமும் இல்லை.அவ்வாறு செய்வது நூற்றாண்டு கட்டிக்காத்த இரண்டு நாடுகளின் ராணுவத்தையுமே செயல் இழக்க செய்யும் என்பதோடு எகிப்திலும் உள்நாட்டு யுத்தம் வெடிக்கும் சூழலையும் ஏற்படுத்தி இருக்கும்.
சவுதி தலைமையிலான ஹூதி தீவிரவாதிகளுக்கு எதிரான யுத்தம் தற்பாதுகாப்பு,யமன் நாட்டின் அவசர வேண்டுகோள்,பிராந்திய நாடுகளின் ஒற்றுமை,ஈரானின் ஆதிக்கதுக்கு எதிரான நிலைபாடு என்ற பல சிறப்பியல்போடு நடப்பதே அதன் நியாயத்தையும் நிதர்சன நிதர்சன உண்மையையும் வெளிப்படை தன்மையையும் எடுத்து காட்டுகின்றன.
எல்லைப்புற பாதுகாப்பை உறுதிசெய்ய எந்த நாடும் சொல்லும் நியாயமான காரணங்களுடன் சவூதி ஹூதிகளுடன் யுத்த தீர்மானம் எடுத்ததில் எந்த திடுக்கிடும் ரகசியமும் மர்மம் முடிச்சும் இல்லை அதை நிரூபிக்க அணுப்பிழந்த ஆய்வும் தேவை.வன்முறையே தீர்வு என்பவர்களை தீர்த்துக்கட்டி தனது நாட்டுக்கும் பிராந்திய நாடுகளுக்கும் தன்னை அழைத்த நாட்டுக்கும் அமைதி வாழ்க்கைக்கான தீர்வுகட்டுவதுமே சவுதியின் திடீர் யுத்த நிலைப்பாட்டுக்கான முழு நியாயங்களும் ஆகும்.
அஹ்மத் ஜம்ஷாத் (அல் அஸ்ஹரி) Cairo- Egypt