பல இடங்களில் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நான்கு பேர் முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக் கவசங்கள் அணிந்திருந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பொலிஸ் ஊடகப் பிரிவு,
ஹிக்கடுவ பகுதியில் கடந்த மாதம் இடம்பெற்ற கொலைச் சம்பவம் மற்றும் தெஹிவளை அத்திடிய தனியார் வங்கி கொள்ளை, பிலியந்தல, அத்துருகிரிய பகுதிகளில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களை மேற்கொண்டோர் தலைகவசங்களை அணிந்தே கொள்ளையிட்டுள்ளனர்.
கடந்த வருடத்தில் மாத்திரம் 217 குற்றச் செயல்கள் முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக் கவசங்கள் அணிந்த நபர்களினாலே மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவ்வருடம் மார்ச் மாதம் மாதம் வரையில் 221 குற்றச் செயல்கள் முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக் கவசங்கள் அணிந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன.
முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக் கவசங்கள் அணிந்து மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பதற்கு மார்ச் மாதம் 21 ஆம் திகதி முதல் தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. எனினும் பின்னர் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.
இந்நிலையில் கடந்த 2 ஆம் திகதி முகத்தை முழுமையாக மூடிய தலைக்கவசத் தடை தொடர்பான சுற்றறிக்கைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பித்தது. குறித்த திட்டத்தை செயற்படுத்த எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இத்தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.