எம்.ஐ.அப்துல் நஸார்
காலி கராப்பிட்டிய வைத்தியசாலையின் இருதய நோய்ப் பிரிவில் சத்திர சிகிச்சையொன்று இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் பற்றரியின் உதவியுடன் குறித்த சத்திர சிகிச்சையினை தொடர்ந்து மேற்கொண்ட போதிலும் மேலும் 40 நிமிடங்கள் வரையிலேயே அந்த பற்றரி இயங்கக்கூடிய சக்தியை கொண்டிருந்ததாகவும் சத்திர சிகிச்சையின் பின்னர் இயந்திர சாதனங்களை இயக்குவதற்கு மின்சாரம் இல்லாமலிருந்ததாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலதிக மின் பிறப்பாக்கி மூலமோ அல்லது வேறு வகையிலோ நோயாளியின் உயிரைப் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உறவினர்களும் வைத்திய சேவையினரும் கோருகின்றனர்.
காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஷெல்டன் பெரேரா விபரிக்கையில் இன்று அதிகாலை மின்னலுடனான மழையினைத் தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகத் தெரிவித்தார். மின்சார பகுதியினர் வருகைதந்துள்ளதாகவும் விரைவாக மின்சாரத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்