Breaking
Thu. Oct 31st, 2024

ரஷ்யாவில் அரியவகை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அடுத்த ஆண்டு, உலகின் முதல் தலை மாற்று அறுவை சிகிச்சை நடைபெறவிருக்கிறது.

ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் வசிக்கும் வேலேரி ஸ்ரிடோனோவ் சிறு வயதில் மரபணு குறைபாடு காரணமாக, தசைகள் வளர்ச்சியற்று வேர்டிங் ஹாப்மேன் நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் அவரின் தலை பகுதி மட்டுமே ஆரோக்கியமாக உள்ளது. மற்ற உடல் பாகங்கள் அனைத்தும் வலுவிழந்து சுருங்கிவிட்டது. உடலை அசைக்கவும் முடியாமல் சிரமப்பட்டு வருகிறார். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் 20 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழ மாட்டார்கள். ஆனால் வேலேரிக்கு 30 வயது ஆவதுடன், அவரது உடல் நிலையும் மோசமாகிவருகிறது.

இதனால் கடைசி முயற்சியாக, மிகவும் ஆபத்தான தலையை, மூளை சாவடைந்து ஆரோக்கியமாக உள்ள உடல் ஒன்றில் பொறுத்தும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். இதற்காக இத்தாலியை சேர்ந்த, சர்ச்சைக்குரிய அறுவை சிகிச்சை நிபுணரான செர்ஜியோ கனாவேரோ-வை தொடர்பு கொண்டார். மருத்துவர் செர்ஜியோவும் இந்த ஆபத்தான அறுவை சிகிச்சையை மேற்கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளார்.

ஆனால் உலகின் பல முன்னணி மருத்துவ நிபுணர்கள், இது மரணத்தை விட மோசமானது என்று கூறி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். 45 ஆண்டுகளுக்கு முன்பு குரங்கை வைத்து தலை மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் புதிய தலையை உடல் ஏற்றுக்கொள்ள முடியாமல், 8 நாட்களுக்கு பிறகு அந்த குரங்கு இறந்துவிட்டது.

அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் அறுவை சிகிச்சைக்கு, மூளை சாவு அடைந்த ஒருவரின் உடல் தேவை. மேலும் 36 மணி நேரம் நடைபெற இருக்கும் அறுவை சிகிச்சைக்கு மொத்தமாக 7 மில்லியன் யூரோ பணம் தேவைப்படும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. வேலேரி ஸ்ரிடோனோவ் தலையை அதி நவீன பிளேடால் வெட்டி எடுத்து, உடலின் முதுகு தண்டுடன் இணைக்கவேண்டும். இதுதான் மிகவும் கடினமான மற்றும் ஆபத்தான செயலாகும். அறுவை சிகிச்சைக்கு பிறகு வேலேரி ஸ்ரிடோனோவ் அசைய கூடாது என்பதால் அவர் 4 நாட்களுக்கு கோமாவில் வைக்கப்படுவார் என கூறப்படுகிறது.

இந்த மரணத்துடனான விளையாட்டின் கதாநாயகன் வேலேரி ஸ்ரிடோனோவ் இதுபற்றி கூறும் போது, உங்களுக்கு பயமாக இல்லையா என்று கேட்கிறார்கள், பயமாக இருக்கிறது அதைவிட சுவாரசியமாகவும் இருக்கிறது. இதில் உள்ள ஆபத்துகளை புரிந்து கொண்டே அறுவை சிகிச்சைக்கு ஒத்துக்கொண்டுள்ளேன்.

இது முதன்முதலில் விண்வெளிக்கு பயணம் செய்தவரை போல் தான், எல்லோரும் எதிர்மறையாக நினைத்து கொண்டிருந்தார்கள். ஆனால் நடந்ததோ வேறு. இதை தவிர எனக்கு வேறு வழி இல்லை என்பதால் நான் இதை செய்யவில்லை, ஆபத்தான முயற்சிகளுக்கு தங்களை அர்ப்பணித்தவர்களால் தான் அறிவியல் இந்த அளவு முன்னேற்றம் அடைந்துள்ளது. இந்த முயற்சிக்கு என்னுடைய குடும்பம் முழு ஆதரவு தெரிவித்து உள்ளது என தெரிவித்து உள்ளார்.

தகவல் தொழில்நுட்ப துறையில் பட்டப்படிப்பை முடித்துவிட்டு கணினி துறையில் வேலேரி ஸ்ரிடோனோவ் வேலை பார்த்து வருகிறார்.

Related Post