எம்.நேசமணி
எனது பிறந்த நாளுக்கு என் காதலி அழகான ரோசாப்பூவை பரிசாகக் கொடுத்தாள். ஆனால், அவளது பிறந்த நாளுக்கோ என்னால் எந்தவிதமான பரிசையும் கொடுக்க முடியாமல் போனது. அதனால் சித்திரை புத்தாண்டிற்காவது நல்லதொரு பரிசைக் கொடுக்க எண்ணியிருந்தேன். அந்த சந்தர்ப்பத்திலும் என்னிடம் பணம் இருக்கவில்லை. அம்மாவிடம் பலமுறை பணம் கேட்டும் கொடுக்கவில்லை. அதனால் ஏற்பட்ட கோபத் தால் தான் அம்மாவை தாக்கினேன். அத்துடன் இறந்து போன அம்மாவின் சடலத்தை நிர்வாணப்படுத்தி ஆற் றில் வீசுவதற்காக சுமந்து சென்றபோது பலமுறை தடுக்கி வீழ்ந்தேன். கஹவத்தை பகுதியில் இடம்பெற்ற மர்மக் கொலைப்பட்டியலில் இந்தக் கொலையும் இணைக்கப்படும். என்னை யாரும் சந்தேகப்படமாட்டார்கள் என்பதற்காகவே இப்படியொரு யுக்தியை நான் கையாண்டேன் என கஹவத்தை கொட்டகதெனியவில் படுகொலை செய்யப்பட்ட சந்திராணி சுவர்ணலதாவின் இரண்டாவது மகனான சந்தேக நபர் பொலிஸாரிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளான்.
கஹவத்தை கொட்டகதெனியவைச் சேர்ந்த 39 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான சந்திராணி சுவர்ணலதா மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு நிர்வாண கோலத்தில் ஆற்றில் வீசப்பட்டிருந்தார்.
இந்தக் கொலைச் சம்பவமானது கஹவத்தை பகுதியெங்கும் மீண்டும் அச்சத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தது. ஆனால் பத்துமாதம் சுமந்து பாடுகள் பல பட்டு பெற்றெடுத்த தாயை இவ்வாறாக கொடூரமான முறையில் கொன்று, அதுவும் நிர்வாணப்படுத்தி ஆற்றில் வீசியிருப்பது பெற்ற பிள்ளையாக இருந்திருக்கும் என்பதை எவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
இவ்வாறான பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனின் விசேட பணிப்புரைக்கு அமைவாக குற்றப்புலனாய்வினரும் குற்றத்தடுப்பு பிரிவினரும் கஹவத்தை பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். அதனடிப்படையில் கடந்த ஒன்பதாம் திகதி வியாழக்கிழமையன்று கொலையுண்ட தாயின் இரண்டாவது மகனான 18 வயதுடைய குஷான் மகேஸ் என்பவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரிடம் பொலிஸார் மேற்கொண்ட தீவிர விசாரணைகளின் பிரகாரம் சந்திராணி படுகொலை தொடர்பான மர்ம முடிச்சுக்கள் அவிழ்க்கப் பட்டதுடன் பல்வேறு அதிர்ச்சித் தகவல்களும் வெளியாகின.
தாயின் படுகொலைக்கு தானே காரணம் என ஒப்புக்கொண்ட சந்தேக நபரான இரண்டாவது மகன் தாயை கொலை செய்தவிதம் அதன் பின்னர் மேற்கொண்ட செயற்பாடுகன் என சகலதையும் விலாவாரியாக தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேற்படி வாக்குமூலத்தில் சந்தேக நபர் கூறியதாவது….
“நான் நிவித்திகல இளைஞர் படையணியில் பயிற்சி பெற்று வருகின்றேன். அங்கே பயிற்சி பெற்றுவரும் யுவதியொருவரை நான் காதலித்து வருகின்றேன்.
வாரந்தோரும் வீட்டுக்கு வருவது வழமை. மீண்டும் திங்கட்கிழமையே படையணிக்குச் செல்வேன்.கடந்த மூன்றாம் திகதி போயா தினம் என்றபடியால் வியாழக்கிழமையே வீட்டிற்கு வந்தேன். நான்காம் திகதி காலை நானும் தம்பியும் அம்மாவுடன் இணைந்து வீட்டை சுத்தம் செய்தோம். அந்த சந்தர்ப்பத்தில் எளனது காதலிக்கு குறுந்தகவல் அனுப்பினேன்ன. “என் ஆசை செல்லமே, தங்கமே நீ இன்றி என்னால் இருக்க முடியாது. நாள்தோறும் எனக்கு உன் அழகு முகம் தெரிகிறது” இப்படியே குறுந்தகவல் அனுப்பினேன்.
எனது அண்ணன் ஒரு பிளம்பர். அவர் கொழும்பு பகுதியில் தொழில் புரிந்து வருகிறார். ஆகையால் அவரிடம் பணம் கேட்க முடியாது. எனவே தாயிடம் பணம் கேட்டேன். அவரோ பணம் கொடுக்கவில்லை. “படிப்பதற்கு செலவு செய்யவும் காதலிக்கு பரிசு வாங்கிக் கொடுக்கவும் என்னிடம் பணம் இல்லை” என்றார்.
நான் அந்த யுவதியை காதலித்து வருவதை அம்மா அறிந்து வைத்துள்ளார். ஆகையினாலேயே அப்படிக் கூறினார். அம்மா பணம் கொடுக்காமையினால் அவரிடம் நான் சண்டையிட்டேன். அந்த சமயம் அம்மா இரவு சாப்பாடு சமைப்பதற்காக மூன்று முட்டைகளையும் சோயா மீட் பெக்கற் ஒன்றினையும் வாங்கி வந்திருந்தார்.
அந்த சமயம் வீட்டில் அப்பா இருக்கவில்லை. அவர் வெளியில் சென்றிருந்தார். தம்பியும் பாட்டி வீட்டிற்கு சென்றிருந்தான். எனவே நானும் அம்மாவும் மாத்திரமே வீட்டில் இருந்தோம். அம்மா எனக்கு பணம் கொடுக்காததால் நான் இரவு சாப்பிடவில்லை. எனது அறைக்குள் சென்று மீண்டும் காதலிக்கு குறுந்தகவல் அனுப்பினேன்.
பொலிஸார் என்னிடம் முதல்முறையாக விசாரணை செய்தபோது, சம்பவ தினத்தன்று இரவு சாப்பிட்டதாகவும் காதலிக்கு குறுந்தகவல் ஏதும் அனுப்பவில்லை எனவும் பொய் கூறினேன். அம்மாவின் கொலைச் சம்பவத்தில் அகப்பட்டு விடுவேன் என்ற அச்சத்திலேயே ஆரம்பத்தில் அப்படிப் பொய் கூறினேன்.
கடந்த மாதம் 27 ஆம் திகதி எனது பிறந்தநாள் அன்று எனது காதலி அழகான ரோசாப்பூவினை பரிசாகக் கொடுத்தாள். ஆனால் எனக்கோ அவளது பிறந்த நாளுக்கு பரிசொன்றை கொடுக்கமுடியாமல் போனது. சரி, பரவாயில்லை. புதுவருடத்திற்காவது நல்லதொரு பரிசை கொடுப்போம் என்று எண்ணியிருந்தேன். அதற்காகவே கடந்த மூன்றாம் திகதி அம்மாவிடம் பணம் கேட்டேன்.
அம்மா பணம் கொடுக்காமல் என்னை திட்டினார். அம்மாவிடம் மீண்டும் பணம் கேட்டேன். அப்போது அம்மா பணம் கொடுக்கவில்லை. பணம் கொடுக்காவிட்டால் கழுத்தை வெட்டிக்கொண்டு இறந்து விடுவேன் என கூறினேன். அதற்கு அம்மா பெண்ணொருத்திக்காக தற்கொலை செய்ய நீ என்ன முட்டாளா என தீட்டினார். அத்தோடு உன்னை பெற்றதற்கு தோட்டத்தில் சில வாழைக்கன்றுகளையாவது நாட்டியிருக்கலாம் என்றார்.
அம்மா பணம் கொடுக்காமல் மீண்டும் திட்டியதால் எனக்கு கோபம் வந்தது. எனவே சமயலறைகுச் சென்று அங்கு பெட்டிக்குள் இருந்த கத்தியை எடுத்து வந்து அம்மாவை தாக்கினேன். அம்மாவுக்கு காயம் ஏற்பட்டது. இரத்தம் பீரிட்டு பாய்ந்தது. எனவே அந்த சமயம் சற்று பதற்றமாக இருந்தது. அத்தோடு அம்மா அப்படியே துடிதுடித்தார். எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.
உடனே அறைக்குள் சென்று கைக்குட்டையொன்றை எடுத்துக் கொண்டு வந்தேன். அம்மாவின் கைப்பகுதியில் ஏற்பட்ட காயத்தை சுற்றி கட்டினேன். அதன் பின்னர் அம்மாவை தூக்கி வந்து கீழே இருந்த மெத்தையில் இருக்கச் செய்தேன். சற்று நேரத்தில் அம்மா இறந்து கிடந்ததை உணர்ந்தேன்.
பதற்றமடைந்த நான் இறந்துகிடந்த தாயின் சடலத்தின் மீது சரமாரியாக கத்தியால் குத்தினேன். அதன் பின்னர் தாயின் ஆடைகளை களைந்தேன். கொடகெதெனிய பகுதியில் பல பெண்கள் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். அந்தப் பட்டியலில் தாயின் மரணமும் சேர்க்கப்பட்டுவிடும் என்று எண்ணினேன். என்னை யாரும் சந்தேகப்படக் கூடாது என்பதற்காகவே தாயின் ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தி சடலத்தை ஆற்றில் வீசினேன்.
ஆற்றில் வீசுவதற்காக அம்மாவின் சடலத்தை தூக்கிக்கொண்டு சென்ற போது மூன்று தடவைகள் சடலத்துடன் தடுக்கி வீழ்ந்தேன். தலைப்பகுதியிலிருந்து அதிகமான இரத்தம் வெளியேறியதால் பொலித்தீன் பையொன்றை எடுத்து தலையை மூடினேன். எல்லா இடத்திலும் இரத்தம் கொட்டும் என்பதற்காகவே அப்படி செய்தேன்.
அம்மாவின் சடலத்தை ஆற்றில் வீசிவிட்டு உள்ளாடைகளையும் மறைத்து வைத்துவிட்டு வீட்டிற்கு வந்தேன். வீடு வந்ததும் எனது காதலிக்கு குட்நைட் கூறி குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு எதுவும் தெரியாததைபோல் உறங்கச் சென்றேன்.
அதிகாலை அப்பா வீடுவந்தார். வீட்டில் சிந்தியிருந்த இரத்தக் கறையை பார்த்து பதற்றமடைந்தார். அம்மாவுக்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. நான் நன்றாக தூங்கிவிட்டேன் என்று அப்பாவிடம் கூறினேன். அதன் பின்னரே அம்மா காணாமல் போனதாக அப்பா பொலிஸில் முறைப்பாடு செய்தார்” என சந்தேக நபர் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பெற்றத் தாயையே பணத்துக்காக கொலை செய்யும் அளவுக்கு இன்று சமூகம் மோசமடைந்துள்ளது எண்ணும்போது, வேதனையாக இருக்கின்றது. இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெறாதிருக்க நல்ல வழிகாட்டல்களையும் போதனைகளையும் வழங்க வேண்டும். அத்தோடு எப்பொழுதும் பிள்ளைகளின் செயற்பாடுகளில் அவதானமாக இருக்க வேண்டும். அவர்களது நடத்தை மற்றும் அவர்கள் பழகுவோர் தொடர்பிலும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். இல்லையேல் இதுபோன்ற விடயங்களை கட்டுப்படுத்துவது கடினம். எனவே பிள்ளைகள் விடயத்தில் பெற்றோர் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டியது கட்டாயமானதாகும்.