மக்கா மற்றும் மதினாவுக்கு ஈரானியர்கள் உம்ரா புனித யாத்திரைக்குச் செல்வதை ஈரான் இடைநிறுத்தி வைத்திருக்கிறது. ஈரானுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையே, யெமன் மோதல் குறித்த பிரச்சனையில். உறவுகள் மோசமடைந்து வருவதன் பின்னணியில் இந்த நடவடிக்கை வந்திருக்கிறது.
கடந்த மாதம் ஜித்தா விமான நிலையத்தில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த இரண்டு ஈரானிய ஆண் யாத்ரிகர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, தவறாக நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தை அடுத்து, இந்த உம்ரா புனிதப் பயணங்கள் அனைத்தும் நிறுத்தப்படுவதாக ஈரானின் கலாசார அமைச்சகம் கூறியது.
இந்த சம்பவத்துக்குப் பொறுப்பானவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்படும் வரை இந்த இடை நிறுத்தம் நீடிக்கும் என்று ஈரானிய கலாசார அமைச்சர் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பாக டெஹ்ரானில் உள்ள சவுதி அரேபியத் தூதரகத்தின் முன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
ஆண்டுதோறும் , சுமார் ஐந்து லட்சம் இரானியர்கள் உம்ராவுக்காக சௌதி அரேபியா செல்கிறார்கள். உம்ரா என்பது ஆண்டின் எந்த காலகட்டத்திலும் செய்யக்கூடிய ஒரு புனித யாத்திரை.