Breaking
Mon. Nov 25th, 2024
செல்வ வளமை மிக்க சவுதி அரேபியாவில் திருமணம் செய்துகொள்ள விரும்பும் இளைஞர்கள் பெண்களுக்கு சீதனத்தொகை (மஹர்) மற்றும் தங்க நகைகளை அளிக்க வேண்டும். இதற்கு வழியில்லாமல் சற்று கஷ்டமான சூழ்நிலையில் இருப்பவர்களின் திருமண செலவுக்கு தேவையான தொகையை சவுதி அரசின் சமூக நலத்துறை அமைச்சகம் அளித்து வருகின்றது.
இந்த அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் சமூக மேம்பாட்டு துறைக்கு சவுதியில் உள்ள 21 தொண்டு நிறுவனங்கள் இதற்கான பரிந்துரைகளை அனுப்பி வைக்கின்றன. மணமகனின் குடும்பச் சூழல், குணநலன், நன்னடத்தை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பரிந்துரைகள் ஆய்வு செய்யும் அரசு அதிகாரிகள், தகுதிக்குரிய இளைஞர்களுக்கு திருமண உதவித்தொகையை இதுவரை வழங்கி வந்தனர்.
இந்நிலையில், இந்த தொகையினைப் பெற விரும்புவர்கள் ஐந்து வேளையும் தவறாமல் தொழுகை நடத்துபவரா? என அவர்கள் வசிக்கும் பகுதியில் இருக்கும் மசூதியின் தலைமை இமாமிடம் இனி சான்றிதழ் பெற்று விண்ணப்பிக்க வேண்டும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான சான்றிதழை வழங்கும் அதிகாரம் தலைமை இமாம்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட மசூதிகளுக்கு விண்ணப்பதாரர் வேளை தவறாமல் சென்று தொழுகை நடத்துகின்றாரா? என அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி மனு செய்யும் அனைவருக்குமே உதவித்தொகை கிடைத்து விடுவதில்லை. இருப்பினும், அரசின் உதவி பெறுபவர்கள் ஒழுக்கமாக வாழ வேண்டும் என்ற கட்டுப்பாட்டை விதிப்பதன் வாயிலாக நன்னடத்தைகளை பின்பற்ற வேண்டும் என்ற எண்ணத்தை இளைஞர்கள் மனதில் உருவாக்குவதே சவுதி அரசின் நோக்கமாக உள்ளது என்பதை இதன்மூலம் உணர்ந்து கொள்ளலாம்.

Related Post