இர்ஷாத் றஹ்மத்துல்லாஹ்
வவுனியா மாவட்ட இளைஞர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவர தேவையான உதவிகளை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ள வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவரும்,கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சருமான றிஷாத் பதியுதீன் மாவட்டத்தின் அபிவிருத்தி குழு தலைவர் என்ற வகையில் இது தொடர்பில் கவனத்தை செலுத்துவதாகவும் கூறினார்.
வவுனியா இரம்பைக்குளம் விளையாட்டு மைதானத்தில் இன்று இடம் பெற்ற புதுவருடன விளையாட்டுப் போட்டிகளின் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு கூறினார்.
திரிபேர்ட்ஸ் விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்திருந்த இந்த விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான வெற்றிக் கிண்ணத்தை வழங்கி வைத்து உரையாற்றுகையில் அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் அமைச்சர் தமதுரையில் –
” இந்த மாவட்டத்தின் அபிவிருத்தி குழு தலைாவராக இருந்து நான் எனது பணிகளை செய்தவருகின்றேன்.என்னில் இனப்பாகுபாடுகள் இல்லை.யுத்தப் பாதிப்புக்களை சந்தித்த எனது மாவட்ட மக்களுக்கு பணியாற்றக் கிடைத்தமை நான் பெற்ற பாக்கியமாகும்.
எனது இந்த அரசியல் காலத்தில் அரச நியமனங்களை வழங்கியுள்ளேன்.அபிவிருத்தி திட்டங்களை செய்துள்ளேன்.எவருக்கு எது தேவையோ அதனை முன்னுரிமைப்படுத்தி செய்துவந்துள்ளேன்.உங்களைப் போன்ற இளைஞர்கள் தான் இந்த நாட்டின் சிறந்த தலைவர்காளக இருக்க வேண்டும்.
“இன்று அரச நியமனங்களை பெற்ற எத்தனையோ பேர்கள் உயர் பதவிகளில் இருக்கின்றனர்.அதனை காணுகின்றபோது மகிழ்வாக இருக்கின்றது.இதுபோல் இந்த மாவட்ட இளைஞர்கள் விளையாட்டுத் துறையிலும் சாதனைகளை படைக்க வேண்டும்.பிரதேச,மாவட்ட ரீதியிலும்,அதனோடு தேசிய ரீதியிலும் எமது மாவட்டத்தின் பெயரை பதிவு செய்ய வேண்டும்.
“இளைஞர்களின் திறமையும்,ஆற்றலும் அபரிமிதமானது. இந்த இளைஞர்களின் முழுமையான பங்களிப்பு இருக்குமெனில் எமது மாவட்டத்தை பல் துறையிலும் முன்னேற்றம் காண செய்யலாம்.சிலர் இனவாதம்,மதவாதம் பேசி எமக்குள் பிரிவினைகளை ஏற்படுத்த முயற்சிப்பார்கள் அவர்கள் தொடர்பல் விழிப்பாக இருக்க வேண்டும்” – என்று அமைச்சர் றிஷாத் பதியுதீன் கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்வில் பரந்தன் இரசாயன கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் ஷாஹிப் மொஹிதீன்,அமைச்சரின் இணைப்பு செயலயாளர் முத்து முஹம்மத், வவுனியா நகர சபை முன்னாள் உறுப்பினர்கள் அப்துல் பாரி,எம்.ஆரிப் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.