கடந்த ஒரு வருடத்தில் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளை மையம் கொண்டு உலகில் தீவிரமடையத் தொடங்கிய எபோலா ஆட்கொல்லி நோயின் தாக்கத்துக்கு இதுவரை 25 000 பேர் உட்பட்டுள்ளதுடன் இதில் 10 000 இற்கும் அதிகமானவர்கள் பலியாகியும் உள்ளனர்.
ஆனால் உயிர் தப்பிய ஏனையவர்களின் வாழ்க்கையும் இன்னமும் ஊசல் நிலையில் இருப்பதுடன் சாதாரண நிலைக்குத் திரும்பவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுவரை தடுப்பு மருந்தோ குணப் படுத்தும் மருந்தோ கண்டு பிடிக்கப் படாத எபோலா தொற்று நோயே நவீன உலகின் அவசர சுகாதார அறைகூவலாக விளங்குகின்றது. இதனைக் குணப் படுத்த முடியாது என்பதால் பரவாது தடுப்பதே முக்கிய நோக்காகக் கொண்டு சர்வதேசம் தொழிற்பட்டு வரும் நிலையில் இந்த வருடம் ஜனவரிக்குள் மில்லியன் கணக்கானவர்களுக்கு இது தொற்றி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டிருந்த போதும் அது உண்மையாகவில்லை. ஆனால் இன்னும் ஒவ்வொரு வாரமும் குறைந்தது 12 பேர் இதன் தொற்றுக்கு ஆளாகி வருவதாகக் கணிக்கப் பட்டுள்ளது.
உலக சுகாதாரத் தாபனமான WHO இன் ஏப்பிரல் 5 ஆம் திகதிக்கான வாரத்துக்கான அறிக்கைப் படி உலகம் முழுதும் தற்போது சுமார் 30 புதிய எபோலாத் தொற்றுக்கள் அடையாளம் காணப் பட்டுள்ளன. இதுவே மே 2014 இற்குப் பின்னரான மிகக் குறைந்த வாராந்த எண்ணிக்கை ஆகும். மறுபுறம் மேற்கு ஆப்பிரிக்காவில் எபோலாவின் தாக்கத்துக்கு அதிகம் உள்ளான லிபேரியாவிலும் சியெர்ரா லெயோனேவிலும் இதன் தொற்றுக்கு உள்ளாகி வருபவர்களின் எண்ணிக்கை மிக வீழ்ச்சியடைந்திருப்பதாகவும் தேவைக்கும் அதிகமாகவே சிகிச்சை மையங்கள் அமைக்கப் பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப் படுகின்றது. இந்த நாடுகளில் WHO இன் தலைமையிலான சிகிச்சை மையங்கள் எபோலாவால் பலியானவர்களின் சடலங்களைப் பாதுகாப்பாக அழிப்பது மற்றும் பாதுகாப்பான முறையில் நோயாளிகளைக் கையாள்வது ஆகிய நடவடிக்கைகளால் எபோலா பரவும் வீதம் மிகவும் குறைந்து வருகின்றது. ஆனால் கினியாவிலோ ஏப்பிரல் 5 தொடக்கம் 19 பேரின் பலி உறுதி செய்யப் பட்டுள்ளது. மேலும் அங்கு 21 பாதுகாப்பற்ற புதைகுழிகள் இனம் காணப் பட்டுள்ளன.