அமெரிக்காவில் உள்ள ஒருவர், தன் ஸ்மார்ட்போனில் தொடர்ந்து ஒரு மாதத்துக்கும் மேலாக ‘கேண்டி கிரஷ்’ விளையாடியதால் அவரின் இடது கை பெருவிரல் தசைநார் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவ இதழ் ஒன்றில் வெளியான கட்டுரை அமெரிக்கர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
‘லைவ் சயின்ஸ்’ எனும் பிரபல மருத்துவ அறிவியல் ஆய்விதழில் சமீபத்தில் ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது. அதில் கேண்டி கிரஷ் விளையாடிய ஒருவருக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து கூறப்பட்டிருந்தது. அந்தக் கட்டுரையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:
கலிபோர்னியாவில் 29 வயது இளைஞர் ஒருவர் வாழ்ந்து வருகிறார். இவர் தனது ஸ்மார்ட்போனில், ஒரு மாதத்துக்கும் மேலாக இடைவிடாமல் கேண்டி கிரஷ் சாகா எனும் விளையாட்டை விளையாடியிருக்கிறார். இதன் காரணமாக ஒரு கட்டத்தில் அவரது இடதுகை பெருவிரலை அசைத்தால் வலி ஏற்படுவது தெரிந்தது. எனவே, அவர் மருத்துவரிடம் சென்றார்.
அங்கு அவரை எம்.ஆர்.ஐ.ஸ்கேனுக்கு உட்படுத்திய போது, அவரது பெருவிரல் தசைநார் சேதமடைந்திருப்பது தெரிய வந்தது. அப்போது மருத்துவரிடம் விவரத்தைக் கூறினார். மேலும் அவர், தான் விளையாடும்போது தனக்கு வலி தெரியவில்லை என்றும் கூறினார்.
பொதுவாக, இதுபோன்ற சமயங்களில் வலி ஏற்படவே செய்யும். ஆனால் இவர் வீடியோ கேமில் மூழ்கிவிட்டார். அதில் அவர் அடையக் கூடிய வெற்றி அவருக்கு மேலும் ஊக்கத்தை தந்துள்ளது. இந்த ஊக்கம் அவரின் வலியை மறக்கடிக்கச் செய்துள்ளது. ஆக, வீடியோ கேம்கள் ஒரு விதத்தில் டிஜிட்டல் வலி நிவாரணிகளாகச் செயல்பட்டு வருவது இதன் மூலம் தெரியவருகிறது. இது மிகவும் ஆபத்தானது.
இந்த தசைநாரில் ஏற்படும் பாதிப்பு, மெலிதான இடத்திலோ அல்லது எலும்புடன் இணைந்த பகுதியிலோ ஏற்பட்டிருந்தால் அந்த தசைநார் கிழிந்திருக்கும். அதுவே, கடினமான இடத்தில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், தாங்க முடியாத வலி ஏற்பட்டிருக்கும். தற்போது அவருக்கு பெருவிரலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.