இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரை கோபுரத்தில் இந்தியாவுக்கு எதிரான மின்னணு கண்காணிப்பு வசதி அடங்குவதாக வெளியான செய்தியை சீனா நிராகரித்துள்ளது. இது ஒரு அடிப்படை அற்ற குற்றச்சாட்டு என தாமரை கோபுரத்தின் முதலீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான கருத்து இலங்கை அரசாங்கத்தை அவமானப்படுத்தும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் புதுடில்லியை மையமாகக் கொண்டு இயங்கும் பாஸ்கர் ராய் என்ற ஆய்வாளர், இலங்கையில் தாமரை கோபுரத் திட்டத்தை நிறைவு செய்ய இடமளித்தால் அது இந்து சமுத்திரத்திற்கு ஆபத்தாக அமையும் என்றும் தெற்காசியாவில் மிக உயரமான கோபுரம் என்பதால் அது மின்னணு கண்காணிப்பு வசதிக்கு பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான கருத்து இந்தியாவை மாத்திரமல்ல இலங்கையையும் அவமானப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என்றும் இலங்கையால் மதிப்பீடு செய்யப்பட்டு அமைச்சரவை அங்கீகாரத்துடன் இந்த கோபுரம் அமைக்கப்பட்டு வருவதாகவும் சீனா குறிப்பிட்டுள்ளது.
தாமரை கோபுரம் என்பது டிஜிட்டல் ஒளிபரப்பு மற்றும் தொலைக்காட்சி, சுற்றுலா, பொழுதுபோக்கு மற்றும் கடைத் தொகுதிகளைக் கொண்டது என்று சீனா கூறியுள்ளது. இந்த கோபுரம் அமைக்கப்பட்டு முடிந்தால் இலங்கையின் தரமான டிஜிட்டல் ஔிபரப்பு துறையின் முன்னேற்றத்தை தெற்காசியாவிற்கே எடுத்துக் காட்டலாம் என சீனா தெரிவித்துள்ளது.