விசித்திரங்களின் தாய் நாடான அமெரிக்காவில் மற்றுமொரு விசித்திர சம்பவம் அரங்கேறியுள்ளது. கொலரடோ மாநிலத்தில் கைதுப்பாக்கியால் கம்ப்யூட்டரை சுட்டுக் கொன்ற மனிதனை(?) போலீசார் பிடித்து வைத்துள்ளனர்.
கொலரடோ ஸ்பிரிங்ஸ் காவல் துறையால் ‘கம்ப்யூட்டரைக் கொலை செய்த மனிதன்’ என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த திங்கள் அன்று கொலரடோ நகர்ப்புற எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடும் துப்பாக்கிச் சூடு நடப்பதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. உடனடியாக, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் லூகாஸ்(37) என்ற நபரைப் பிடித்து விசாரித்தனர்.
கடந்த சில மாதங்களாகவே சரிவர வேலை செய்யாத தனது கம்ப்யூட்டருடன் போராடி வந்த லூகாஸ், சரியாக வேலை செய்யாமல் தனக்கு துரோகம் செய்த கம்ப்யூட்டருக்கு(!!!) தக்க தண்டனை கொடுக்க முடிவு செய்து, தன் வீட்டிற்குப் பின்னால் உள்ள சந்துக்குள் அந்தக் கம்ப்யூட்டரைப் போட்டு, 8 முறை அதைக் கைத்துப்பாக்கியால் சுட்டு தனது கொலை வெறியைத் தீர்த்துக் கொண்டுள்ளார்.
கம்ப்யூட்டருக்கு தண்டனை கொடுத்த லூகாசுக்கு, தண்டனை வழங்க கொலரடோ நீதிபதிகள் காத்திருக்கின்றனர்.