‘ஒரே மாதிரி 7 பேர் இந்த உலகத்துல இருப்பாங்களான்னு தெரியாது. ஆனா உங்கள அப்புடியே உரிச்சு வச்சா மாதிரி ஒருத்தர் நிச்சயம் இருப்பார். அதுவும் நீங்க இருக்குற இடத்துக்கு சில மைல் தூரத்திலேயே அவர் இருப்பார்’ என்பதுதான் ஐரீஷ் நாட்டு தேவதை நியாம் நமக்கு சொல்ல வரும் செய்தி.
டப்ளின்னைச் சேர்ந்த 26 வயது நியாமுக்கு தன்னைப் போலவே இந்த உலகில் யாராவாது இருக்கிறார்களா? என்று தெரிந்து கொள்ளும் ஆவல் வெகு நாட்களாகவே இருந்து வந்தது. அதைக் கண்டுபிடிக்க என்ன செய்யலாம்? என்று பல இரவுகள் உறங்காமல் யோசித்த நியாம், கடந்த மார்ச் 30-ம் தேதி ‘ட்வின் ஸ்ட்ரேஞ்ஜர்ஸ்’ என்ற ப்ராஜக்டை தனது நண்பர்களுடன் சேர்ந்து தொடங்கினார். இந்த ப்ராஜக்டின் நோக்கம் 28 நாட்களுக்குள் தன்னைப் போலவே இருக்கும் ஒரு பெண்ணைக் கண்டுபிடிப்பது.
பேஸ்புக்கில் இதற்காகவே ஒரு பக்கத்தை தொடங்கிய நியாம். தன்னைப் போலவே தோற்றமளிக்கும் எவரும் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவித்தார். மேலும் அந்தப் பக்கத்தில் தன்னுடைய விதவிதமான புகைப்படங்களையும் பதிவேற்றினார். தீவிர தேடுதல் வேட்டையின் விளைவாக இரண்டே வாரத்தில் ‘கரண்’ என்ற பெண்ணைக் கண்டுபிடித்தார்.
இத்தனைக்கும் நியாம் வசிக்கும் இடத்திலிருந்து ஒரு மணி நேரத்திற்கும் குறைவான பயண தூரத்தில் வசிப்பவர்தான் கரண். இருவரும் சந்தித்துக் கொண்ட அதிசய தருணத்தையும், இருவரும் ஒரே மாதிரி மேக் அப் போட்டுக் கொண்டு இரட்டைக் குழந்தைகளைப் போல் தோற்றமளிக்கும் வீடியோவையும் யூ-டியூபில் பதிவேற்றினார்.
இதுவரை 60 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். இன்னும் பலர் பார்க்கக் காத்திருக்கின்றனர்…