மக்களுக்கு நாம் கொடுத்த வாக்குறுதிகளுக்கு அமைய அரசாங்கத்தின் நூறு நாட்கள் வேலைத்திட்டம் முழுமையாக நிறைவடைந்ததுள்ளது. கொடுத்த வாக்குறுதிகளை செய்து காட்டி விட்டோம் என அரசாங்கம் தெரிவித்தது.
19ஆவது திருத்தம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் அதையும் நிறைவேற்றிவிட்டு பொதுதேர்தலுக்கு செல்வதாகவும் குறிப்பிட்டது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்;
நாம் கொடுத்த வாக்குறுதிகளுக்கு அமைய நூறு நாட்கள் வேலைத்திட்டத்தினை முழுமையாக முடித்துவிட்டோம்.நாம் மக்களின் வாழ்வாதார சுமையினை குறைப்பதாக குறிப்பிட்டோம்.
அதை செய்து காட்டிவிட்டோம். இதில் விமர்சனங்களுக்கு இடம்இல்லை. அரச ஊழியர்களின் சம்பள உயர்வு ஓய்வூதிய நிதிக் கொடுப்பனவு உயர்வடைந்து விட்டது. தனியார் துறையினருக்கான சம்பள உயர்வு தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளோம். சமூர்த்தி வேலைத்திட்டம் கர்ப்பிணிப் பெண்களுக்கான போசனை வேலைத்திட்டம் மற்றும் அவர்களுக்கான நிவாரணம் வழங்குவதில் மிகப் பெரிய வெற்றி கண்டுள்ளோம். அதே போல் அத்தியாவசியப்பொருட்களின் விலை குறைவடைந்துள்ளது. மக்கள் உணரும் வகையில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
எரிபொருள் நிவாரணம் வழங்குவதாக குறிப்பிட்டோம். எரிவாயு விலை குறைப்பு செய்வதாக வாக்குறுதி வழங்கினோம். அதற்கமைய விலைக்குறைப்பு செய்துள்ளோம். நெல்லுக்கான நிர்ணய விலை அதிகரிப்பு செய்துள்ளோம். அதேபோல் பெருந்தோட்ட துறை நிவாரணங்களை பெற்றுள்ளது. ஒரு சில இடங்களில் தவறுகள் சில இடம்பெற்றிருக்க முடியும் சில விடயங்களில் கால தாமதம் ஏற்பட்டிருக்கலாம் ஆனால் எமது 100 நாள் வேலைத்திட்டத்தில் மக்களின் அத்தியாவசிய பொருட்கள் விலை குறைப்பு நிவாரணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வடக்கில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணம் வழங்கப்பட்டு வருகின்றது. இலவச வை பை இணைய தொழில்நுட்பம் செயற்படுத்தப்பட்டுள்ளது. இளைஞர் பாராளுமன்றம் பலமடைந்துள்ளது. இவ்வாறு பல வேலைத்திட்டங்கள் முழுமையாக முடிவடைந்து விட்டது. வீடமைப்பு ஒளடத மருத்துவ செயற்பாடுகள் கல்விசார் நடவடிக்கைகள் என அனைத்தும் முழுமைப்படுத்தப்பட்டுள்ளன. அதே போல் கருத்து சுதந்திரம் பலமடைந்துவிட்டது. இவற்றில் சில செயற்பாடுகள் விடுபட்டிருக்கலாம். ஆனால் நாம் குறிப்பிட்டதற்கு அமைய மக்களின் வாழ்வாதார சுமையினை குறைத்து விட்டோம். நூறு நாட்களில் அபிவிருத்தி செய்ய முடியாது. ஆனால் மக்களுக்கு நிவாரணங்கள் மட்டுமே வழங்க முடியும். அதை செய்து கொடுத்துள்ளோம். இதனூடாக எதிர்வரும் காலங்களில் அபிவிருத்தியின் பாதையில் கொண்டு செல்ல முடியும்.
இவ் விடயத்தில் விமர்சனங்கள் எழும்பலாம் அதை ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் குறைகளை நிரூபிக்க முடியாது. பிரதமரின் திட்டத்தில் நூறு நாட்கள் வேலைத்திட்டத்தினை செய்து முடித்துள்ளோம். மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் முழுமையாக செயற்பட்டுவிட்டது. 19 ஆவது திருத்தம் மட்டுமே எஞ்சியுள்ளது. அதையும் நிறைவேற்றிய பின்னர் பொதுத் தேர்தலுக்கு தயாராகுவோம்.