தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் புதிய அரசாங்கம் சிறப்பு சலுகைகளை வழங்கி வருவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிராகரித்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் மாத்திரமல்ல தென்னிலங்கையில் குறிப்பாக கொழும்பு கோட்டைப்பகுதியிலும் படையினரின் நடவடிக்கைகளுக்காக காணிகள், கட்டடங்கள் கையடகப்படுத்தப்பட்டிருந்தன. எனினும் இன்று அவை திருப்பிக் கொடுக்கப்படுகின்றன.
எனவே இனங்களுக்கு இடையில் குரோதங்களை ஏற்படுத்தும் வண்ணம் சில அரசியல்வாதிகள், விடுதலைப்புலிகள் குறித்த கருத்துக்கள் உட்பட்ட பொய்களை ஊடகங்களின் மூலம் மேற்கொள்ளும் பிரசாரங்களை நம்ப வேண்டாம் என்று ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.
சிங்கள மக்களை பொறுத்த வரை அவர்கள் தமது அடையாளத்தை பேணும் அதேநேரம் ஏனைய மக்களின் உரிமைகளையும் மதிக்கும் கடப்பாட்டை கொண்டிருப்பதாக மைத்திரிபால குறிப்பிட்டார்.
புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம் முடிவடிந்தமையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு விசேட உரை ஒன்றை ஜனாதிபதி தற்போது நிகழ்த்திக்கொண்டிருக்கிறார்.
இதன்போது நாட்டின் நலன்கருதி 19வது திருத்தச்சட்டத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தமது ஆதரவை வழங்க வேண்டும் என்று அவர் கோரினார்.
புதிய அரசாங்கத்தின் கீழ் இதுவரை தாம் லஞ்ச ஊழல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை.
நீதிமன்ற நீதிபதிகளுடன் தொலைபேசியின் மூலம் தொடர்புக்கொண்டு பேசியதில்லை.
இந்தநிலையில் ஊழல் மற்றும் நிதிக்கொள்ளைகளுக்கு எதிராக தாம் கடும் நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
பொதுமக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு தாம் ஒருபோதும் இடம்தரப்போவதில்லை.
ஜனவரி 8ஆம் திகதியன்று தமக்கு வாக்களித்த மக்களின் நம்பிக்கையை காக்கும் வண்ணம் தாம் செயற்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
புதிய அரசாங்கத்தின் கீழ் நம்பிக்கை மற்றும் சர்வதேச உறுதிப்பாடு என்பவை கட்டியெழுப்பப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.