இனவாதங்களைத் தூண்டும் வகையிலான செய்திகளையும் கட்டுரைகளையும் சமூக வலைத்தளங்கள் வெளியிட்டு வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்கள் மக்கள் மத்தியில் குறிப்பாக இளம் சந்ததியினர் மத்தியில் பிரபல்யம் பெற்று வரும் நிலையில் இனவாதங்களை தூண்டும் வகையில் செய்திகளை பிரசுரிப்பது பாதிப்பை ஏற்படுத்துமென்றும் அவர் கூறினார். அரசாங்க ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பத்திரிகை ஆசிரியர்களை நேற்று சந்தித்த ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் இந்தச் சந்திப்பு நடந்தது. அரசாங்க ஊடகங்களின் செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தச் சந்திப்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
சம்பூரில் மீள்குடியேற்றம் செய்யப்படுகிறது. இது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் செய்யப்படுகின்ற பிரசாரங்கள் உண்மைக்குப் புறம்பானதாகவே இருக்கின்றன. சம்பூரில் (திருமலை மாவட்டம்) இடம்பெயர்ந்த மக்கள் மீள்குடியேற்றப்பட்டு வருகிறார்கள். ஆனால் புலிகளை அரசு மீள்குடியேற்றுகிறது என பொய்ப் பிரசாரம் செய்வதோடு, இராணுவத்தையும், கடற்படையினரையும் அங்கிருந்து அகற்றுவதாக பிரசாரம் செய்கிறார்கள். இது முற்றிலும் பொய்யான செய்தியாகும்.
இனவாதத்தை முறியடிக்க வேண்டும். இது மக்களை விரைவாகப் பற்றக்கூடியது. இதனை முறியடிக்கும் வகையில் அரசாங்க ஊடகங்கள், அங்குள்ள உண்மை நிலையை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.
பாராளுமன்றத்திலே இரண்டொரு தினங்களுக்கு முன்னர் நடந்த சம்பவங்கள் மிகவும் அசிங்கமானது. ஆனால் ஊடகங்கள் எம்.பிக்கள் நடந்து கொண்ட விதத்தையே காண்பித்தன. அது தொடர் பான உண்மை நிலையை வெளிக்கொணர வில்லை. உண்மையைச் சொல்லி மக்களைத் தெளிவுபடுத்த வேண்டும்.