Breaking
Wed. Oct 30th, 2024

பூகம்பத்தால் சின்னா பின்னமான நேபாளத்தில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த பூகம்ப சேதம் குறித்து ஐ.நா.சபை கணக்கெடுப்பு நடத்தி வருகிறது.

இந்த பூகம்பத்தில் 39 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் 11 மாவட்டங்கள் மிக கடுமையான பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. சுமார் 80 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அடிக்கடி நில அதிர்வுகள் ஏற்படுவதால் அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கூடாரங்களில் குடும்பத்துடன் தங்கியுள்ளனர்.

அவை போதுமான அளவில் இல்லை. எனவே மேலும் கூடாரம் அமைக்க தார்பாய்கள், சுத்தமான தண்ணீர், சோப்புகள் மற்றும் மருந்துகள் தேவைப்படுகின்றன.

பூகம்பம் பாதித்த காத்மாண்டு பள்ளத்தாக்கில் கடந்த 2 நாட்களாக பொது மக்கள் வாழ்க்கை முடங்கி கிடக்கிறது. சிறிய கடைகள் மட்டுமே திறந்துள்ளன. பெரிய வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

கார்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் எரிபொருள் நிரப்ப கியாஸ் நிறுவனங்கள் வரிசையாக காத்திருக்கின்றன. வங்கிகள் மூடப்பட்டுள்ளன. ஏ.டி.எம். எந்திரங்கள் செயல்படுகின்றன. ஆனால் அதில் பணம் பரிவர்த்தனை இல்லை.

காத்மாண்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் திறந்தவெளியில் 21 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. உலக உணவு திட்டத்தின் கீழ் உணவு பொருட்கள் வினியோகம் செய்யப்படுகிறது.

‘யூனிசெப்’ நிறுவனம் கூடாரங்களையும், சுகாதார பராமரிப்பு பொருட்களையும் வழங்குகிறது. உலக சுகாதார நிறுவனம் 40 ஆயிரம் பேருக்கு மருந்து சப்ளை செய்கிறது. பல சர்வதேச அறக்கட்டளைகள் நேபாளத்தில் முகாமிட்டு நிவாரண உதவிகளை செய்து வருகின்றன.

Related Post