18 வருடங்களுக்கு முன்னர் எல்.ரீ.ரீ.ஈ இனரால் மட்டக்களப்பு சித்தாண்டிப் பகுதியில் வைத்துக் கடத்தப்பட்ட ஹையேஸ் வேன் கொழும்பில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சமயம் ஏறாவூர் பொலிஸாரால் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தின் பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி எம்.எஸ்பி. பிறேமதிலக்க தெரிவித்தார்.
கம்பஹா – வெலிவேரியாப் பகுதியில் பாதையோரத்தில் வாகன விற்பனைச் சந்தையில் விற்பனைக்கிடப்பட்டிருந்த சமயம் இந்த வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது.
வாகனத்தை விற்பனைக்கு வைத்திருந்த பீற்றர் பெரேரா, மற்றும் வாகனப் பதிவுப் பெயரை மாற்றுவதற்கு விண்ணப்பம் செய்திருந்த மெதகெதர லலித் பிரியங்க அபேகுணவர்தன என்பவர்கள் வாகனத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர். வாகனத்தை விற்றதாகக் கூறப்படும் நாமல் ஜயரத்தின என்பவர் தேடப்படுகிறார்.
மட்டக்களப்பு பதில் நீதிபதி டி. சின்னையா முன்னிலையில் நேற்று இந்த சந்தேக நபர்கள் ஆஜர் செய்யப்பட்டபோது 20 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
கடற்படை வீரரான தமிழர் ஒருவரும் அவரது குடும்பத்தினரும் மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த போது 1996.08.11 அன்று ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சித்தாண்டிச் சந்தியில் வைத்து எல்ரீரீஈ இனரால் கடத்தப்பட்டதாக அப்போதே ஏறாவூர் பொலிஸில் முறையிடப்பட்டிருந்தது.
வாகனத்துடன் கடத்தப்பட்ட தம்பிராசா இந்திரநாதன் குடும்பத்தினர் ஒரு மாதங்களின் பின்னர் எல்ரீரீஈ இனரால் விடுதலை செய்யப்பட்டிருந்தனர் என்று கூறப்படுகின்றது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் வாகனப் பதிவுத் திணைக்களத்திலிருந்து பெயர் மாற்றுவதற்காக மெதகெதர லலித் பிரியங்க அபேகுணவர்தன என்பவர் கண்டியிலுள்ள போலியான முகவரியைக் கொடுத்து விண்ணப்பம் செய்துள்ளார்.
குற்றத் தடுப்புப் பொலிஸ் பொறுப்பதிகாரி ஹிரன் செனவிரட்ன, பொலிஸ் சாரஜன்ற் எம். நுஜமுதீன் (64087) பொலிஸ் கான்ஸ்டபிள் ஆர்.எம். பண்டிதரெடன (55164) ஆகியோர் கொண்ட குழுவே மட்டக்களப்பிலிருந்து கண்டி, மற்றும் கம்பஹாவுக்குச் சென்று இந்த வாகனத்தையும் சந்தேக நபர்களையும் கைது செய்வதில் ஈடுபட்டிருந்தனர்.