நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இடிந்து தரைமட்டமாகிப்போன ஒரு வீட்டின் அடியில் சுமார் 4 மாத குழந்தை சிக்கிக் கொண்டிருந்ததை கண்ட நேபாள ராணுவத்தினர் அந்த குழந்தை பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று நினைத்து அருகாமையில் உயிருக்குப் போராடியபடி, வலியாலும் வேதனையாலும் முனகிக் கொண்டிருந்த மற்றவர்களை காப்பாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, ஒரு ராணுவ வீரரின் காதுகளில் மட்டும் சிறு குழந்தையின் மெல்லிய அழுகுரல் சத்தம் லேசாக விழுந்தது. சத்தம் வந்த இடத்துக்கு விரைந்து சென்றபோது, சற்று நேரத்துக்கு முன்னர் இறந்து விட்டதாக கருதிய குழந்தை இன்னும் உயிருடன் இருப்பதை அறிந்துகொண்ட அவர், அருகாமையில் இருந்த சக வீரர்களை உதவிக்கு அழைத்தார்.
அவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து இடிபாடுகளில் இருந்து அந்த குழந்தையை உயிருடன் மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். சிறிய சிராய்ப்புகளை தவிர உடலில் எவ்வித உள்காயங்களும் இன்றி அந்த குழந்தை நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். எனினும், இடிபாடுகளில் சுமார் 22 மணி நேரம் சிக்கியிருந்த அந்த 4 மாத குழந்தை உயிருடன் மீட்கப்பட்ட செய்தியை நேபாள ஊடகங்கள் மீண்டும், மீண்டும் செய்தியாக வெளியிட்டு வருகின்றன.