அளுத்கம சம்பவத்தினால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட விபரீதங்களுக்கு முன்னாள் ஆட்சியாளரும் அவரது குடும்பத்தினரும் நெருங்கிய காரணகர்த்தாக்களாக இருந்துள்ளனர் என்பதை அதில் சம்பந்தப்பட்டவர்களே வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளனர் என்று தேசிய ஐக்கிய அமைப்பின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம். எம். சுஹைர் தெரிவித்தார்.
கொழும்பு – 12, வாழைத்தோட்டத்தில் அமைந்துள்ள சுவர்க்கத்து மலர்கள் பாலர் பாடசாலையின் 30 ஆவது வருடப் பரிசளிப்பு விழா மருதானை டவர் மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது. இவ்வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இவ்வைபவத்தில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
கடந்த ஆட்சிக் காலத்தில் இந்நாட்டு முஸ்லிம் சமூகம் பலவிதமான நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து துன்புறுத்தப்பட்டு கேவலப்படுத்தப்பட்டது.
இவ்வாறான நிலையில் முஸ்லிம்கள் அழுது தொழுது கேட்ட பிரார்த்தனைகளினதும் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்றுபட்டு ஆதரவு நல்கியதன் பயனாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எம்மால் வெற்றி பெறச் செய்ய முடிந்தது. அவரது வெற்றியை நாம் தொடர்ந்தும் பாதுகாக்க வேண்டும்.
கடந்த ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட அளுத்கம சம்பவத்தில் முன்னாள் ஆட்சியாளரும் அவரது குடும்பத்தினரும் சம்பந்தப்பட்டு இருந்தனர் என்பதை அதனோடு அதில் சம்பந்தப்பட்டவர்கள் ஊடாகவே வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதனால் முஸ்லிம்களும் முஸ்லிம் தலைவர்களும் சமூகத்தின் நலன்களைக் கருத்தில் கொண்டு ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். இது காலத்தின் அவசியத் தேவை. அதேநேரம் நாம் இன மத ரீதியாகத் தொடர்ந்தும் பிரிந்து வாழ்ந்தால் பல கஷ்டங்களை எதிர்நோக்க வேண்டிவரும்.
அதனால் இன்றைய சூழ்நிலையில் சமூகங்களுக்கிடையே ஒற்றுமை மிக அவசியமானது. அது நாட்டின் சுபீட்சத்திற்கு மிக அவசியம்
இப்பாலர் பாடசாலையில் கல்வி கற்ற பின்பு பலர் முன்னணிப் பாடசாலைகளில் உயர்கல்வி கற்றுக் கொண்டு இருக்கின்றனர். சமூகத்தில் முன் மாதிரியான பிரஜைகளாகவும் திகழுகின்றனர்.
இவர்களில் தற்போது வேறு பாடசாலைகளில் கற்கும் மாணவர்களில் சிலர் இப்பாடசாலையின் பழைய மாணவர்கள் என்றவகையில் இங்கு பல்வேறு நிகழ்ச்சிகளை மிகவும் திறமையாக அரங்கேற்றினார்கள். அவர்களின் எதிர்காலத்திற்கு எமது நல்வாழ்த்துக்கள்.
இன்றைய சிறார்கள் தான் நாளையத் தலைவர்கள் எனக் கூறுவதைக் கேட்டிருக்கின்றோம். இப்படியான சிறார்கள் நாட்டின் சிறந்த பிரஜைகளாக உருவாக்கப்பட வேண்டும். அவர்கள் நாட்டுக்கும் சமூகத்திற்கும் நன்மை பயக்கக் கூடியவர்களாகவும் ஒழுக்க சீலர்களாகவும் விளங்க வேண்டும்.
ஆகவே, இச்சிறார்களின் பிஞ்சு உள்ளங்களில் நல்ல விடயங்களே விதைக்கப் பட வேண்டும். அதற்காக சிறார்களின் கல்வி மேம்பாட்டில் ஆசிரியர்கள் மாத்திரமல்லாமல் பெற்றோரும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
இப்பாலர் பாடசாலையை உருவாக்கி அதனை சிறப்பான முறையில் முன்னெடுப்பதற்கு வாழைத்தோட்டம் இஸ்லாமிய நலன்புரிச் சங்கத்தினர் அளப்பரிய பங்களிப்புக்களை நல்கியுள்ளனர். அவர்களது பங்களிப்புக்கள் என்றும் பாராட்டப்பட வேண்டியவையே.
இப்பாலர் பாடசாலைக்கு பங்களிப்புக்களை நல்கியவர்களில் எனது நெருங்கிய நண்பரும், சிரேஷ்ட எழுத்தாளருமான எஸ் ஐ. நாகூர்கனி குறிப்பிடத்தக்கவராவார். அவரது பணிகளைப் பாராட்டி அவருக்கு இங்கு கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது. இது எனக்குப் பெரும் மகிழ்ச்சியை அளிக்கின்றது என்றார்.
இவ்வைபவத்தில் சிரேஷ்ட எழுத்தாளர் எஸ். ஐ. நாகூர் கனி, ரசூல் ஏ. ரஹீம். ஏ. எல். எம். லத்தீப். எம். லியாகத் அலி, ஆகியோர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர். அத்தோடு பாலர் பாடசாலை அதிபர் நிஹாரா நஸார் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.