Breaking
Sat. Nov 23rd, 2024

முஸ்லிம்களுக்கு எதிராக அராஜகங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டிருந்த தருணத்தில் முஸ்லிம்களின் பிரச்சினையை கண்டுக்கொள்ளாத முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது முஸ்லிம் தலைமைகளை சந்திக்க தீடீரென ஞானம் பிறந்தமைக்கான காரணம் என்ன?  என்று மேல் மாகாண சபை உறுப்பினரும் ஐ.தே.க மத்திய கொழும்பு அமைப்பாளருமான முஜிபூர் ரஹ்மான் கேள்வி எழுப்பினார்.

முஸ்லிம் சமூகத்திற்கு அநியாயமிழைக்கப்பட்டபோது சட்டத்தை அமுல்படுத்தாது வேடிக்கை பார்த்த முன்னாள் ஜனாதிபதி இன்று முஸ்லிம்களுடன் சந்திப்புகளை ஏற்பாடுசெய்வது நகைப்புகுரியதாக மாறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மத்திய கொழும்பு ஐக்கிய தேசிய கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை வரலாற்றில் முஸ்லிம்களுக்கு அதிக அநியாயம் இழைக்கப்பட்டது ஒல்லாந்தர் காலத்திலாகும். அவர்கள் நாட்டைக் கைப்பற்றியபோது கொழும்பிலுள்ள முஸ்லிம்களை விரட்டினர். அத்துடன் வர்த்தகத்தை சீர்க்குழைத்தனர். இப்படி பல அட்டூழியங்கள் அப்போது அரங்கேற்றப்பட்டன. இந்த இருண்ட யுகத்திற்கு பின்னர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்திலேயே அதிகமான அட்டூழியங்கள் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக ஏவிவிடப்பட்டன. இந்த தீய சக்திகளுக்கு பின்னால் அப்போதைய அரசாங்கம் இருந்தமையே மிகவும் வருந்தத்தக்க விடயமாக இருந்தது.

குறிப்பாக 30 இற்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் மற்றும் குர்ஆன் மத்ரஸாக்களுக்கு எதிராக பௌத்த பேரினவாதிகள் போர்கொடி தூக்கினர். முக்கியமாக தம்புள்ளை, கிராண்பாஸ், ஜெய்லானி பள்ளிவாசல்களில் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் பெஸன்பக், நோலிமிட் உள்ளிட்ட முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் உட்பட நாட்டின் பல பாகங்களிலும் முஸ்லிம்களின் வியாபார நிலையங்களுக்கு எதிராக பல வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டன.
இவற்றுக்கும் மேலாக அளுத்கம, தர்கா நகர், பேருவளை  துந்துவ மற்றும் வெலிப்பனை பகுதிகளில் இன கலவரம் கட்டவிழ்துவிப்பட்டு முஸ்லிம்களை அச்சமடையச் செய்தனர்.

 இவ்வாறு பல அராஜகங்களை பொது பல சேனா, சிங்கள ராவய, ராவனா பலய உள்ளிட்ட பௌத்த பேரினவாத அமைப்புகள் முன்னெடுத்தபோது நாட்டின் சாதாரன சட்டங்களை கூட அமுல்படுத்தது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மௌனம் காத்தார்.

இவரின் இந்த அராஜமிக்க சர்வதிகார ராஜபக்ஷ ஆட்சிக்கு மூவின மக்களும்;  ஒன்றினைந்து கடந்த ஜனவரி 8 ஆம் திகதி முடிவுகட்டினர். இந்நிலையில் மீண்டும் அரசியலுக்கு பிரவேசிக்க அவர் முயற்சி செய்து வருகிறார். ஆனாலும் அவர் செய்த ஊழல் மோசடிகளும் இனவாத செயற்பாடுகளும் அவரின் அரசியல் மீள் வருகைக்கு தடையாக இருக்கின்றது.

 அவருடைய காலத்தில் பல வரபிரசாதங்களுடன் செயற்பட்டு வந்த சில முஸ்லிம் தலைமைகள்; இன்றும் மஹிந்த ராஜபக்ஷவின் பின்னால் இருந்து செயற்படுகின்றனர். இது முஸ்லிம் சமூகத்தை காட்டிக்கொடுக்கும் செயற்பாடாகும்.

முஸ்லிம் தலைமைகளுடனான சந்திப்பு முடிவடைந்தவுடன்  மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம்களை நேசிப்பவர். கடந்த கால சம்பவங்களுக்கும் அவருக்கும் எவ்விதான தொடர்புமில்லை. இவையனைத்தும் மேற்கத்தியவாதிகளின் சதித்ததிட்டம் என்று எமது தலைவர்கள் அறிவிப்பார்கள்.

இந்த சந்திப்பானது முஸ்லிம்களை ஏமாற்றுவதற்கு நகைச்சுவையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வாகும். இலங்கை முஸ்லிம்கள் மஹிந்த ஆட்சியிலிருந்து பல பாடங்களை படித்து விட்டனர். அவரின் மீள்வருகை முஸ்லிம் சமூகத்திற்கே பேராபத்தாகும். அவரின் மீள்வருகையை தேற்கடிக்க எமது சமூகம் ஒன்றுப்படுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.

Related Post