20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் இம்மாத இறுதியில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
புதிய தேர்தல் மறுசீரமைப்பின் பிரகாரம் விகிதாசார தேர்தல் முறையுடன், தொகுதிவாரியான தேர்தல் முறையும் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த புதிய தேர்தல் முறைமையானது சிறிய கட்சிகளுக்கும், சிறுபான்மை கட்சிகளுக்கும் பாதகமில்லாமல் அவர்களும் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்ளும் வகையில் அமையும் என்று மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய மங்கள சமரவீர,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தமது ஆட்சிக்காலத்தின் போது ரில்லியன் பெறுமதியான சொத்துக்களை சேகரித்துள்ளதாக குற்றஞ்சாட்டினார்.
இது தொடர்பில் புலனாய்வுப்பிரிவினர் தற்போது தகவல்களை திரட்டி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
சாதாரணமாக லட்சாதிபதி, கோடீஸ்வரர் என்பதையே நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். எனினும் மஹிந்த ராஜபக்ச கோடீஸ்வரர்களை காட்டிலும் அதிக சொத்துக்களை அதாவது ரில்லியன் பெறுமதியான சொத்துக்களை வைத்துள்ளார் என்று மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல் ஜனநாயக ரீதியாக இடம்பெற்றது.எனினும் முன்னதாக மஹிந்தவின் அரசாங்கம் அரேபிய நாடுகளின் பாணியில் தூக்கியெறியப்படும் என்று அச்சமும் இருந்தாக அவர் கூறியுள்ளார்.
இதேவேளை 20வது திருத்தச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டவுடன் இந்த மாத இறுதியில் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்று மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார்.
புதிய நாடாளுமன்றம் அமைக்கப்பட்ட பின்னர் வெஸ்ட்மின்ஸ்டர் பாணியிலான முறை நடைமுறைப்படுத்தப்படும்.
அதேநேரம் புதிய நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட்ட பின்னர் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இணங்கியுள்ளதாகவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.