பிரித்தானிய பொதுத் தேர்தல் நேற்று வியாழக்கிழமை ஆரம்பமான போது, வெற்றியைப் பெறுவது யார் என்பதை எதிர்வுகூறமுடியாத நிலையிலுள்ள அந்தத் தேர்தலில் மில்லியன்கணக்கான மக்கள் வாக்களித்தனர்.
இந்தத் தேர்தல் நாடெங்குமுள்ள சுமார் 50,000 வாக்களிப்பு நிலையங்களில் அந்நாட்டு நேரப்படி காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி இரவு 10.00 மணிக்கு நிறைவுபெற்றது.
மொத்தம் 650 பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான மேற்படி தேர்தலில் வாக்களிக்க 50 மில்லியன் பேர் பதிவுசெய்திருந்தனர்.
பொதுத் தேர்தலுடன் 279 அதிகாரசபைக்கான 9,000 க்கும் அதிகமான ஆசனங்களுக்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் பெட்போர்ட், கோப்லான்ட், லெயிசெஸ்டர், மான்ஸ்பீல்ட், மிடில்ஸ்பரோ மற்றும் டோர்பி பிராந்தியங்களுக்கான மேயர்களும் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
அதேசமயம் பெட்போர்ட்ஷியரில் நகர சபை வரியொன்றை அதிகரிப்பது தொடர்பான கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பொன்று நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரோன், தொழிற்கட்சித் தலைவர் எட் மிலிபான்ட், யு.கே.ஐ.பி. கட்சியின் தலைவர் நிகெல் பராஜ், கிறீன்ஸ் கட்சியின் தலைவர் நடாலி பென்னெட், எஸ்.என்.பி. கட்சியின் தலைவர் நிகொலா ஸடர்ஜியன் ஆகியோர் தமது வாக்குகளை ஏற்கனவே அளித்திருந்தனர்.
லண்டனில் உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறாத நிலையில், அந்நகரைத் தவிர்ந்த ஏனைய நகர்களைச் சேர்ந்த அனைத்து வாக்காளர்களுக்கும் அவர்கள் வாக்களிப்பு நிலையங்களில் பிரவேசிக்கையில் குறைந்தது இரு வாக்குச்சீட்டுகள் வழங்கப்பட்டன.
சில வாக்காளர்கள் வியாழக்கிழமை தேர்தலுக்கு முன் தபால் மூலம் தமது வாக்குகளை அளித்திருந்தனர். அத்துடன் இம்முறை மக்களுக்கு முதல் தடவையாக இணையத்தளம் மூலம் வாக்களிப்புக்காக தம்மை பதிவு செய்வது சாத்தியமாகியுள்ளது.பாடசாலைகள் சனசமூக நிலையங்கள், மண்டபங்கள் என்பவற்றுடன் விடுதிகள், ஒரு சலவை செய்யும் இடம், ஒரு பாடசாலை பஸ் என்பன வாக்களிப்பு நிலையங்களாக மாற்றப்பட்டிருந்தன.
மேற்படி தேர்தலின் இறுதி பெறுபேறானது இன்று வெள்ளிக்கிழமை பிற்பகலுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தலில் பிரதமர் டேவிட் கமெரோனின் பழைமைவாத கட்சிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எட் மிலிபான்ட்டின் தொழிற் கட்சிக்குமிடையில் கடும் போட்டி நிலவுவதாக கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புகள் கூறுகின்றன.
எனினும் இந்தத் தேர்தலில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவது சாத்தியமில்லை என நம்பப்படுகிறது.