இலங்கை மீது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ள விசாரணைகள் நீதியைத் துஷ்பிரயோகம் செய்யும் செயற்பாடாகும். அதனால்தான், இலங்கை ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள பாதுகாப்பு அமைச்சரின் கருத்தரங்கொன்றில் கலந்து கொண்டு பேசியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜீ.எல்.பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது, “ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையகத்தின் விசாரணைக் குழுவிடம் சாட்சியமளிப்பதற்காக பொதுமக்களுக்கு பணம் வழங்கப்படுகின்றது. இது தொடர்பான சில சம்பவங்கள் எமக்குத் தெரியவந்துள்ளன. அத்துடன், விசாரணைக்கான சான்றுகள் இரகசியமாக சேகரிக்கப்படுவதற்கான ஆதாரங்களும் எமக்கு கிடைத்துள்ளன. மனித உரிமை விவகாரம் குறித்து சில நாடுகள் கொடுத்து வரும் அழுத்தமே இலங்கை எதிர்கொள்ளும் மிகப் பெரும் சவாலாகவுள்ளது. எனினும், அரசாங்கம் சர்வதேச சமூகத்திடமிருந்து தன்னை தனிமைப்படுத்த முயலவில்லை” என்றுள்ளார்.