மன்னார் வில்பத்து வனப் பகுதியில் தமிழ் முஸ்லிம் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர் என ஊடகங்கள் மேற்கொள்ளும் பரப்புரைகள் உண்மை இல்லை என வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழு தெரிவித்துள்ளது.
வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழு தனது ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்ததாவது:
1990ஆம் ஆண்டு புலிகளால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடபுல முஸ்லிம்கள் யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் தமது சொந்த நிலங்களுக்குச் சென்று மீள்குடியேறும் நோக்கில் காடுகளை அழித்து வீடு வாசல் வயல் நிலங்களை துப்பரவு செய்து மீள்குடியேறி வருகின்றார்கள்.
எனினும் கடந்த இரண்டு வருடங்களாக பொது பலசேனா, ஹெல பொது சவிய போன்ற சிங்கள தீவிர வாத அமைப்புகள், முஸ்லீம்கள் இலங்கைக்குள் இஸ்லாமிய தீவிரவாதம் மற்றும் போதைப் பொருட்களை இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரும் நோக்கில் தமது மீள்குடியேற்ற திட்டங்களை அமுலாக்கும் வகையில் வில்பத்து இயற்கை சரணாலயத்தை அழித்து சூழலுக்கு மாசுபடுத்துகிறார்கள் என்று குற்றஞ்சாட்டி வந்தன.
இதன் தொடர்ச்சியாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹிரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான வில்பத்துவில் மீள்குடியேற்றம் என்ற பொய்யைத் தொடர்ந்து சமூக ஊடகங்கள் வாயிலாகவும் திட்டமிட்ட முறையில் வடக்கு முஸ்லிம்களது மீள்குடியேற்றம் வில்பத்து காடுகளை அழித்தே இடம்பெறுகின்றது என்ற போலிப் பரப்புரையை சிங்கள மக்கள் மத்தியில் மேற்கொண்டு வருகின்றன.
சில ஊடகங்கள் வடமாகாண முஸ்லிம்களது மீள்குடியேற்றத்தை அரசியல்வாதிகளுடன் சம்பந்தப்படுத்தி தாமதப்படுத்துகின்ற அல்லது சிக்கல்களுக்குள் மாட்டிவிடுகின்ற மோசமான கைங்கரியத்தில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, வடமாகாண முஸ்லிம்களது மீள்குடியேற்ற விவகாரத்தில் குறிப்பிட்ட அவ் ஊடகங்கள் தொடர்ந்தும் பல்வேறு அழுத்தங்களை பிரயோகித்து வருவதன் மூலம் முஸ்லிம்களது மீள்குடியேற்றத்தை தடுத்து வருகின்றன. இத்தகைய ஊடகங்களின் பொறுப்பற்ற நடவடிக்கையால் வடபுல முஸ்லிம்கள் நிம்மதியாக வாழமுடியாத சூழல் உருவாகிவுள்ளது. இவ்வாறான நடவடிக்கைகளை அனாவசியமாக மேற்கொள்ளும் ஊடகங்களுக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வில்பத்து வனப்பகுதியின் ஒரு எல்லை மன்னார் முசலிப் பிரதேச கிராமங்களின் எல்லையாகும். வில்பத்து வனப் பிரதேசத்தின் முடிவுக்கும் முசலி கிராமங்களுக்குமான பிரிப்பு தெளிவற்றுக் காணப்படுகிறது. நாட்டில் இடம்பெற்ற போர்சூழல் காரணமாக வடக்கு முஸ்லீம்கள் இடம்பெயர்ந்து சுமார் 24 வருடங்களாக ஆள் நடமாட்டம் இன்றிக் கிடந்த கிராமங்கள் அடர்ந்த காடுகளுடன் இணைந்தன. காடுகளும் கிராமங்களும் ஒன்றாகிப்போனது. கிராமங்களுக்கான எல்லைகள் சில அடையாளங்களினூடாகவே உறுதிப்படுத்தப்பட்டன.
ஆனால், 2011ம், 2014ம் ஆண்டுகளில் பெறப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்களை ஆதாரமாக வைத்துக்கொண்டு காடுகள் விரவிக் காணப்பட்ட மரிசுக்கட்டி வில்பத்து காட்டுப்பகுதியில் முஸ்லிம்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து சிங்கள இனவாதிகள் குரல் எழுப்புகின்றனர். அவ்வாறே வில்பத்து காடுகள் அழிவதற்கு அமைச்சர் ரிசாட் அவர்கள் மக்களை மீளகுடியமர்த்தினார் என்றும் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
உண்மையில், வடபுல முஸ்லிம்களது மீள்குடியேற்றத்தை விரும்பாத சில சிங்களவர்களும் அவ்வூடகங்களும் முசலி பிரதேசம் தொடர்பாகவும் அங்கு வாழ்ந்துவந்த மக்கள், இனப் பரம்பல் முறை, வரலாறு, பின்னணி தொடர்பாக எவ்வித அடிப்படை அறிவும் இன்றி இத்தகைய போலிப் பிரசார நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர். இத்தகைய இனவாதிகள் 24 வருடங்களுக்கு முன்பும் அங்கு முஸ்லிம்கள் வாழ்ந்து வந்தார்கள் என்பதை அறிய மாட்டார்களா? இம்மக்கள் வாழ்ந்தற்கான அடையாளங்களை உறுதிசெய்கிற 1985ம், 1990ம் ஆண்டுகளில் பெறப்பட்ட செய்மதிப் படங்களை பாராது யுத்த சூழலில் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டதன் பின்னர் காடுகளாகிப்போன நிலையை மறைத்து போலியாக வாதிடுவது அடிப்படையற்றதாகும்.
உண்மையில் அரசாங்கம் வடக்கு முஸ்லிம்களது மீள்குடியேற்ற விடையத்தில் திட்டமிட்ட அடிப்படையில் எத்தகைய நடவடிக்கைகளையும் செய்திராத நிலையில் வடக்கு தமிழ் முஸ்லிம் மக்கள் தமது சொந்த நிலங்களில் மீள்குடியேறி வாழும் உரிமையை தடுக்கும் நோக்கில் இத்தகைய குழுவினர் செயற்பட்டு வருவது கண்டிக்கத்தக்கதாகும். அவ்வாறே இம்மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அமைச்சர் ரிஷாட் பதியுதீனையும் இது தொடர்பில் குற்றம் சுமத்துவது ரிஷாட் பதியுத்தீனுக்கும் கடந்த அரசாங்கத்துக்குமிடையில் காணப்பட்ட நெருக்கத்தை முன்வைத்து அமைச்சர் மீது தாக்குதல் நடத்துவதற்கான ஒரு நடவடிக்கையாகும்.
1990ம் ஆண்டு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போது சுமார் 75000 பேராக இருந்தவர்கள் இரு தசாப்தங்களின் பின்னர் மும்மடங்காக அதிகரித்துள்ளனர். இந்நிலையில் போர்ச்சூழல் முடிவுற்றதன் பின்னால் மீள்குடியேறி வருகின்ற மக்களுக்கான திட்டமிட்ட வீட்டு வசதிகள் காணிப் பங்கீடுகளை அரசாங்கம் உரிய முறையில் வழங்காத நிலையில் சிங்கள இனத்தைச் சார்ந்த சிலர் மற்றும் சில ஊடகங்கள் போரால் பாதிக்கப்பட்ட மக்களது மீள்குடியேற்றத்தை தடுக்கும் வகையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது வடக்கு முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்தை வெகுவாகப் பாதிக்கும் எனவும் ஊடகங்கள் இது தொடர்பில் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் எனவும் வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழு தனது ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தலைவர்
வடக்கு முஸ்லீம் பிரஜைகள் குழு