அன்று பிரதமர் பதவி கேட்டு மைத்திரி மஹிந்தவை சுற்றிவந்தார். இன்று மஹிந்த பிரதமர் பதவி கேட்டு மைத்திரியை சுற்றி வருகிறார். இதுதான் விதியின் விளையாட்டு என பரிகாசம் செய்கிறார் ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திஸாநாயக்க.
ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாப்பிரேரணை மஹிந்த அணி யின் மக்களை ஏமாற்றும் பித்தலாட்டம் என்றும் அவர் தெரிவித்தார்.
பெல்வத்தையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற
ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே ஜே.வி.பி. தலைவரும் எம்பியுமான அநுர திஸாநாயக இவ்வாறு தெரவித்தார்.
இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
இன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அன்று தனக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பிரதமர் பதவியை கேட்டு அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சுற்றி வந்தார்.
ஆனால் அப்பதவி மைத்திரிக்கு வழங்கப்படவில்லை.
இன்று பொதுத்தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிட சந்தர்ப்பம் கேட்டு மஹிந்த ராஜபக்ஷ – மைத்திரிபால சிறிசேனவை சுற்றி வருகிறார்.
இதனைத்தான் விதியின் விளையாட்டு என்பது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் இன்று முரண்பாடுகள் தலைதூக்கியுள்ளதோடு மஹிந்த அணி மைத்திரி அணி என இரண்டாக பிளவுபட்டுள்ளது.
குருநாகலையில் இடம்பெற்ற மஹிந்த அணி கூட்டத்தில் 30 பேருக்கும் குறைவான எம்.பி. மாரே கலந்து கொண்டனர்.
கடந்த ஜனவரி 8 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷவின் சர்வாதிகார தோல்வி கண்டாலும் மஹிந்தவின் அணி தோல்வி காணவில்லை. அந்த அணிதான் இன்று ஆட்டம் போடுகிறது.
எனவே பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை நடத்தினால் இந்த அணியின் ஆட்டம் அடங்கி விடும்.
ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லாப்பிரேரணை கொண்டு வரப்போவதாக கூறும் மஹிந்த அணியின் கருத்துக்கள் மக்களை ஏமாற்றும் பித்தாலாட்டம் ஆகும்.
ஏற்கனவே ஜோன் அமரதுங்க ரவிகருணாநாயகவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப்பிரேரணைகள் கொண்டு வருவதாக கூறினார்.
அதெல்லாம் எங்கே போனது என்றும் அநுர திஸாநாயக்க எம்.பி. கேள்வி எழுப்பினார்.
அத்துடன் மஹிந்த ராஜபக் ஷ, பந்துல குணவர்த்தன, விமல் வீரவன்ஸ ஆகியோருக்கு அன்று கசப்பாகக் காணப்பட்ட ஜெனீவா இன்று இனிப்பாக மாறி விட்டது என்பது வேடிக்கையாகவுள்ளது என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸா நாயக்க எம்.பி. தெரிவித்தார்.
மேலும் திருடர்களை பாதுகாப்பது சர்வதேச பாராளுமன்ற சங்கத்தின் கடமையல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் ஜெனீவா என்ற வார்த்தையை கூறுகையில், மஹிந்த ராஜபக் ஷ, பந்துல குணவர்த்தன, விமல் வீரவன்ஸ கூட்டணிக்கு கசக்கும்.
ஜெனீவா என்றாலே அது தடை செய்யப்பட்ட வார்த்தையாக இருந்தது.
இன்று அது அவர்களுக்கு இனிப்பாக மாறியுள்ளது. சர்வதேச பாராளுமன்ற சங்கமானது பாராளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகள் மறுக்கப்படும் போதும் அவர்கள் தாக்கப்படும்போதும் அவர்களுக்காக குரல் கொடுக்கும் எம்.பி.க்களின் உரிமைகளை பாதுகாக்கும் சங்கமாகும்.
அதுதான் அச் சங்கத்தின் கடமையாகும்.
அதைவிடுத்து ஊழல் மோசடிகளில் ஈடுபடும் திருட்டு எம்.பி.க்களைப் பாதுகாப் பது இச் சங்கத்தின் கடமையல்ல.
எமது நாட்டில் முன்னைய காலங்களில் பயங்கரவாத தடுப்பு பிரிவு, போதைவஸ்து தடுப்பு பிரிவுகள் இயங்கவில்லை.
ஆனால் காலப்போக்கில் நாட்டில் பயங்கரவாத போதைப்பொருள் பிரச்சினைகள் தலைதூக்கும் போது மேற்கண்ட விசேட பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டன.
அதேபோன்று தான் பாரிய ஊழல் மோசடி களை ஆராய விசேட நிதிக்குற்றவியல் பிரிவு ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் அநுர திஸாநாயக்க எம்.பி. தெரிவித்தார்.