நேபாளத்தில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குவதற்காக இலங்கையில் இருந்து மற்றுமொரு விமானம் அந்த நாட்டுக்கு புறப்பட்டுச் செல்லவுள்ளது.
நாளை காலை 09.00 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து குறித்த விமானம் தனது பயணத்தை ஆரம்பிக்கவுள்ளது.
நேபாளத்திற்கு உதவிக் கரம் நீட்டும் நோக்கோடு இலங்கையில் இருந்து புறப்பட்டுச் செல்லும் நான்காவது விமானம் இதுவாகும்.
இதில் 18 டன் நிறையுடைய உதவிப் பொருட்கள் ஏற்றிச் செல்லப்படவுள்ளதுடன், இந்தப் பொருட்கள் இன்று அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியால் அதிகாரிகளிடம் வழங்கி வைக்கப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நேபாளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக உதவிப் பொருட்களுடன் சென்ற முதலாவது குழுவினர் நாளை நாடு திரும்பவுள்ளனர்.
கடந்த மாதம் (ஏப்ரல்) 25ம் திகதி நேபாளத்தையே உலுக்கிய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு இன்னும் தனியாத நிலையில், அந்த நாட்டில் இன்று காலை அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அதிகாலை 01.50க்கு காத்மாண்டுவில் இருந்து 100 கி.மீ கிழக்கில் உள்ள சிந்துபல்சவுக் மாவட்டத்தில் 4.2 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சிந்துபல்சவுக் நிலநடுக்கத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
02.44 அளவில் உதய்பூர் மாவட்டத்தில் 4 ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. பின்னர் விடியற்காலை 06.34க்கு சிந்துபல்சவுக் மாவட்டத்தில் 4.4 ரிக்டர் அளவிற்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக காத்மாண்டுவில் உள்ள தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 25-ல் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தால் இதுவரை 8019 பேர் பலியாகியுள்ளனர். 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இந்தநிலையில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிர்சேதம் எதுவும் ஏற்படாத நிலையிலும் வெட்டவெளியில் தங்கியிருக்கும் பொதுமக்களின் பயம் மேலும் அதிகரித்துள்ளது என வௌிநாட்டு ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.