திருகோணமலை மாவட்ட செய்தியாளரான அப்துல் சலாம் யாசீம் செய்தி சேகரிக்கச் சென்ற வேளையில் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டமை குறித்து கிழக்கு ஊடக சங்கம் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
கிழக்கு ஊடக சங்கத்தின் தலைவர் புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ், பொதுச் செயலாளர் வி. பத்மசிறி ஆகியோர் கைnழுத்திட்டு ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள இக்கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
திருகோணமலை, ரொட்டவௌ மதரசா மண்டபத்தில் நடைபெற்ற விவசாய சங்கத்தின் கூட்டத்திற்கு செய்தி சேகரிப்பதற்காகச் சென்றிருந்த திருகோணமலை மாவட்ட செய்தியாளர் அப்துல் சலாம் யாசீம் இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளமையானது, நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலும் ஊடகத்துறையினருக்கு எதிரான சவால்கள் எச்ச சொச்சமாக இருந்து கொண்டிருப்பதையே எடுத்துக்காட்டுவதாக உள்ளது.
இந்த மிலேச்சத்தனமான தாக்குதலை கிழக்கு ஊடக சங்கம் வன்மையாகக் கண்டிப்பதோடு, சம்பந்தப்பட்ட தாக்குதல்தாரிகளை பொலிசார் உடனடியாக அடையாளம் கண்டு கைது செய்து சட்டத்தின் முன்னால் நிறுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றோம்.
ஊடகவியலாளன் என்பவன் சமூகத்தின் நிலைக்கண்ணாடியாவான். மாத்திரமன்றி அவன் சமூகத்தின் காவலனுமாவான். கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்ளத் திராணியற்றவர்கள் கமெராவும், பேனாவுமாக சமூகத்தில் உலாவரும் ஊடகவியலாபளர்களை கத்தியாலும், கைமுஷ்டிகளாலும் தாக்குவதென்பது மிலேச்சத்தனம் மாத்திரமல்ல, கோழைத்தனமுமாகும்.
ஊடகவியலாளர்களை இவ்வாறு அடக்கியொடுக்க முற்படும்போது ஒரு சமூகமே ஊமையாகிப் போகின்றது என்கிய உண்மையை இவ்வாறான தாக்குதல்தாரிகள் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறான தாக்குதல்களுக்கு எதிராக இன, மத, பிரதேச வேறுபாடுகளின்றி யாவரும் கிளர்ந்தெழுந்து கண்டனம் தெரிவிக்க வேண்டும்.
திருக்கோணமலை வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வரும் ஊடகவியலாளர் யாசீம் மிக விரைவில் குணமடைந்து தனது கடமைக்களத்தில் பிரவேசிக்க வேண்டும் எனவும் பிரார்த்திக்கின்றோம் என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.