வில்பத்து மற்றும் அதனையண்டிய பிரதேசத்தில் உரியமுறைகளை பின்பற்றியே வடக்கு முஸ்லிம்களுக்கு அரசாங்கத்தினால் காணிகள் வழங்கப்பட்டதாக பஸில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
வடக்கு வசந்தம் திட்டத்திற்கு தான் பொறுப்பாளராக நியமிக்கபட்பட்டிருந்த போது, உரிய சட்டங்களை பின்பற்றி அங்கு மீளக்குடியேறிய முஸ்லிம்களுக்கு, அரசாங்கத்திற்குரிய காணிகளை வழங்கியதாகவும், இவை முழுக்கமுழுக்க சட்டபூர்வமானவை எனவும் பஸில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
குறித்த பிரதேசங்களில் 1990 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதிகளில் முஸ்லிம்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்கள் உண்டு. அதன்பின்னர் அவர்கள் புலிகளினால் பலாத்காரமாக விரட்டியடிக்கபட்டனர். பயங்கரவாத பிரச்சினை முடிந்ததன் பின்னர் தாம் வாழ்ந்த பகுதிகளிலேயே அந்த முஸ்லிம்கள் மீளக்குடியமர்ந்துள்ளனர். காணி உறுதிகளை தொலைத்தவர்களுக்கு சிறப்பு கச்சேரிகள் ஏற்பாடு செய்யப்பட்டு காணி உறுதிகள் வழங்கப்பட்டன. இவை எல்லாமே சட்டப்படிதான் நடைபெற்றது.
வில்பத்து பகுதியை அண்மித்துள்ள பகுதிகளில் முஸ்லிம்கள் எவரும் சட்டவிரோதமாக குடியேறவில்லை எனவும், அரசாங்கம் வழங்கிய காணிகளிலேயே அவர்கள் மீளக்குடியேற்றப்பட்டதாகவும். எனினும் தற்போது சிலர் தமது இனவாதச் செயற்பாட்டுக்காக இவ்விவகாரத்தை தூக்கிப் பிடித்திருப்பதாகவும் பஸில் ராஜபக்ஸ கவலை வெளியிட்டுள்ளார்.
தற்போது வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவரும் முன்னாள் பொருளாதார துறை அமைச்சர் பஸில் ராஜபக்ஸவை, சுதந்திர கட்சியைச் சேர்ந்த அப்துல் சத்தார் சுகம் விசாரிக்கச் சென்றபோதே இத்தகவலை தெரிவித்துள்ளார்.
அதேவேளை குறித்த பகுதிகளில் மீளக்குடியேறியுள்ள முஸ்லிம்களின் நலனுக்காக போராடும் சக்திகளுடன் தாமும் இணைந்துகொள்ள இருப்பதாக தெரிவித்த அப்துல் சத்தார், இவ்விவகாரத்தில் அமைச்சர் றிசாத் பதியுதீனுக்கும், இவ்விகாரத்துடன் தொடர்டைய அமைப்புகளுக்கும் ஒத்துழைப்பு நல்க காத்திருப்பதாகவும் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு சுட்டிக்காட்டினார்.