அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள டம்ப்பா பகுதியில் வசித்த ஒரு தம்பதியரின் வீடு கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட ஒரு தீ விபத்தில் எரிந்து, நாசமடைந்து தரைமட்டமானது. புதிய வீடு கட்டித்தர முன்வந்த ஒப்பந்தக்காரரும் வீட்டின் உரிமையாளரால் பேசிய தொகையை வழங்க இயலாத நிலையில், வீட்டு வேலையை இழுத்தடித்துக் கொண்டே வந்தார்.
தங்களது குடும்பத்தின் பொருளாதார நிலையை கண்டு வேதனைப்பட்ட 10 வயது சிறுமியான அலிஸா டி லெ சாலா, சாலையோரம் எலுமிச்சைப் பழச்சாறு விற்று நிதி திரட்ட முடிவு செய்தார். தனது சகோதரனின் உதவியுடன், தங்களது பழைய வீட்டை ஒட்டியுள்ள சாலையோரத்தில் ஒரு நடைபாதை கடையை தொடங்கிய அந்த சிறுமியின் பொறுப்புணர்வு பற்றிய செய்தியை உள்ளூர் ஊடகங்கள் செய்தியாக ஒளிபரப்பின.
இதையடுத்து, தொலைதூரத்தில் இருந்தும் அவளது கடைக்கு வாடிக்கையாளராக வரும் பலர், எலுமிச்சை பழச்சாற்றை வாங்கிப் பருகிவிட்டு, ஆளாளுக்கு 500 மற்றும் ஆயிரம் டாலர்களை அளித்துவிட்டு செல்கின்றனர். இதன்மூலம், புதிய வீடுகட்ட இதுவரை அந்தச் சிறுமி சுமார் 15 ஆயிரம் டாலர்களை சேமித்துள்ளதாக அவளது பெற்றோர் பெருமிதத்துடன் குறிப்பிடுகின்றனர்.