Breaking
Sun. Nov 24th, 2024

தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக இன்று காலை 11 மணிக்கு ஜெயலலிதா பதவியேற்கிறார். ஆளுனரை இன்று சந்தித்த ஜெயலலிதா, தனது புதிய அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களின் பட்டியலை ஆளுனர் ரோசைய்யாவிடம் அளித்துள்ளார்.

நேற்று பிற்பகல் 1. 30 மணியளவில் தனது போயஸ் கார்டன் இல்லத்திலிருந்து புறப்பட்ட ஜெயலலிதா கிண்டியில் உள்ள ஆளுனர் மாளிகைக்குச் சென்று ஆளுனரைச் சந்தித்தார். அப்போது, இன்று தன்னுடன் பதவியேற்கவிருக்கும் அமைச்சர்களின் பட்டியலை அவரிடம் அளித்தார்.

தற்போது இருக்கும் அதே அமைச்சரவையில், ஆனந்தன், செந்தூர் பாண்டியன் ஆகிய இருவர் தவிர மற்றவர்கள் அனைவரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். உள்துறை, காவல்துறை உள்ளிட்ட துறைகளை முதலமைச்சர் ஜெயலலிதா கவனிப்பார்.

தற்போது முதலமைச்சராக இருக்கும் ஓ. பன்னீர்செல்வம் நிதி மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள நூற்றாண்டு விழா அரங்கில் ஜெயலலிதா முதலமைச்சராகப் பதவியேற்கும் நிகழ்வு நடக்கவிருக்கிறது.

ஆளுனர் ரோசைய்யாவைச் சந்தித்த பிறகு, ஆளுனர் மாளிகையிலிருந்து புறப்பட்டு நகரின் பிரதான சாலையான அண்ணா சாலையில் உள்ள எம்.ஜி.ஆர், அண்ணா, பெரியார் சிலைகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

7 மாதங்களுக்குப் பிறகு ஜெயலலிதா முதன் முறையாக வெளியில் வருவதால் அவரைக் காண ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அவரது போயஸ் கார்டன் இல்லத்திற்கு வெளியிலும், ஆளுனர் மாளிகைக்குச் செல்லும் வழி, சிலைகளுக்கு மரியாதை செலுத்துவதற்குச் செல்லும் வழிகளில் குவிந்திருந்தனர்.

பல இடங்களில் மேடைகள் அமைக்கப்பட்டு,  பாடல்களுக்கு நடனக் கலைஞர்கள் நடனமாடினர். இதன் காரணமாக, சென்னை நகரில் பல பகுதிகளில் நன்பகல் 12 மணி முதல் நான்கு மணிவரை கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவியது. பல பகுதிகளில் வாகனங்கள் நகர முடியாமல் ஸதம்பித்தன.

அண்ணா சாலையில் ராட்சத பேனர் ஒன்று பேருந்தின் மீது விழுந்தது. இதன் காரணமாக யாருக்கும் காயம் இல்லையென்றாலும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது.பாதுகாப்புப் பணியில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Related Post