இலங்கையில் வடக்கே, யாழ்ப்பாணத்தில் புங்குடுதீவு மாணவி வித்தியா வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கோரமாகக் கொலைசெய்யப்பட்டதைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்ட போராட்டங்களைத் தொடர்ந்து, நாட்டின் தலைமை நீதியரசர் கே. ஸ்ரீபவன் யாழ்ப்பாணம் சென்று அங்குள்ள நிலைமைகளை நேரில் பார்வையிட்டுள்ளார்.
தலைமை நீதியரசருடன் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளும் பொலிஸ்மா அதிபரும் நீதித்துறை முக்கியஸ்தர்கள் பலரும் அங்கு சென்றுள்ளனர்.யாழ்ப்பாணத்தில் நேற்றுமுன்தினம் நடந்த ஆர்ப்பாட்டப் பேரணிகளின்போது யாழ். நீதிமன்றத்தின் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
நீதிமன்றத்தின் மீது நடத்தப்பட்ட கல்வீச்சுத் தாக்குதல் சம்பவம் பற்றி தலைமை நீதியரசர் உள்ளிட்ட குழுவினர் யாழ். மாவட்ட நீதிபதிகள், சட்டத்தரணிகள் மற்றும் நீதிமன்ற உயரதிகாரிகளி்டம் விரிவாகக் கேட்டறிந்ததுடன் அங்கு ஏற்பட்டுள்ள சேதங்களையும் நேரில் பார்த்தறிந்துள்ளனர்.
இதேவேளை, யாழ் நீதிமன்றத்தின் மீது நடத்தப்பட்ட வன்முறை தாக்குதலானது சட்டம்-ஒழுங்கிற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் என்றும் நீதித்துறையின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் கண்டித்து வடமாகாணத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த சட்டத்தரணிகள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டிருக்கின்றனர்.
நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகள் நடத்தப்படவில்லை. எனினும் நீதிமன்ற அலுவலர்கள் வழமைபோல கடமையில் ஈடுபட்டிருந்தனர். வடபகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை அமைதி நிலவுகின்றது.