Breaking
Fri. Dec 27th, 2024

கொழும்பு நகர நிர்மாண வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள மிதக்கும் வர்த்தக சந்தை நாளை  22 ஆம் திகதி மக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட வுள்ளதாக காணி முகாமைத்துவ திட்ட அமுலாக்கல் சிரேஷ்ட ஆலோசகர் வீரசேன அதிகாரி தெரிவித்தார்.
 
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் ஊடக மத்திய நிலையத்தில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தகவல் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது;
 
சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன,  பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ ஆகியோர் இணைந்து இச்சந்தையைத்  திறந்துவைப்பார்கள்
 
கொழும்பு ரயில் நிலையம் மற்றும் பஸ் நிலையம் அமைந்துள்ள பகுதியில் உல்லாசப் பயணிகளைக் கவரும் வகையில் பேரை வாவியில் இந்த மிதக்கும் சந்தை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
 
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் கருத்திட்டத்திற்கு அமைய இராணுவம் மற்றும் கடற்படையினர் இணைந்து இந்த மிதக்கும் சந்தையை நிர்மாணித்துள்ளனர்.
 
92 விற்பனைக் கூடங்கள் இதில் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றுள் 78 கூடங்கள் பெஸ்டியன் மாவத்தை மற்றும் ஓல்கொட் மாவத்தை நடைபாதைக் கடைகள் அகற்றப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Post