புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாய் மற்றும் சகோதரனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியதுடன் தனது அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.
வித்தியாவின் கொலை மற்றும் அதனையடுத்து ஏற்பட்ட வன்முறைகள் தொடர்பில் நேரடியாக ஆராய்வதற்கு இன்று காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி வடக்கு மாகாண ஆளுநர் பளிகக்காரவை சந்தித்துக் கலந்துரையாடியதுடன் வேம்படி பெண்கள் உயர்தரப்பாடசாலையில் வடக்கில் தெரிவுசெய்யப்பட்ட 17 பாடசாலைகளின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
அதன்பின்னர் வடக்கு ஆளுநரின் அலுவலகத்திற்கு வித்தியாவின் பெற்றோர் வரவழைக்கப்பட்டு கலந்துரையாடல்களை மேற்கொண்டார். அதன்போது குற்றவாளிகளை விரைவில் அடையாளம் கண்டு தண்டனையினை வழங்குவதாகவும் வித்தியாவின் கொலைக்கு நீதியை பெற்றுத் தருவதாகவும் பெற்றோரிடம் அவர் உறுதியளித்துள்ளார்.