வாழைச்சேனை நிருபா்
கல்வியில் அரசியலை செலுத்தி மாணவர்களின் கல்வியை சீரளிக்க ஒரு நாளும் நான் அனுமதிக்க மாட்டேன் என்று சமுர்த்தி வீடமைப்பு பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் உள்ள ஊட்டற் பாடசாலையான ஹைராத் வித்தியாலயத்தில் அமைக்கப்படவுள்ள மூன்று மாடிக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுநேற்று (26) இடம் பெற்ற போது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.
“பெற்றோர்கள் தங்களது அரசியலுக்காக பிள்ளைகளின் கல்விக்கூடங்களில் அரசியல் செய்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள் பிள்ளைகளின் கல்வியில் அரசியலை பார்க்காமல் தமது பிரதேசத்தின் கல்வி அபிவிருத்தியை எவ்வாறு அபிவிருத்தி செய்யலாம் என்று சிந்தித்து செயற்படுவதன் மூலமே எமது பிரதேசத்தின் கல்வியை அபிவிருத்தி செய்ய முடியும்.
அரசியலில் நாம் ஒவ்வொருவரும் தாங்கள் விரும்பியவர்களை மற்றும் நிராகரிப்பவர்களை விமர்சிக்கலாம் அது ஒவ்வொருவருடைய உரிமையாகும் அதற்காக ஒரு பிரதேசத்தின் முக்கிய தளமாக விளங்குகின்ற கல்விக்கூடங்களில் அரசியலை செலுத்துவதை தவிர்த்துக் கொள்ளுங்கள் கல்வியில் அரசியலை செலுத்தி கல்வியை சீரளிப்பதற்கு எனது அரசியல் காலத்தில் நான் ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன்.
ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைகள் கல்வி கற்கும் பாடசாலையுடன் அதிகம் தொடர்புள்ளவர்களாக மாறிக் கொள்ளுங்கள் அதிகம் பாடசாலையுடன் தொடர்புள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பதை அனுபவரீதியாக கண்டவன் என்ற வகையில் ஒவ்வொரு பெற்றோருக்கும் கூறிக் கொள்ள விரும்புகிறேன்.
வித்தியாலயத்தின் அதிபர் ஏ.பி.எம்.ஹைதர் தலைமையில் வித்தியாலய மண்டபத்தில் இடம் பெற்ற நிகழ்வில் அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய உதவி கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.கே.றஹ்மான், கிராம அபிவிருத்தி சஙக தலைவர் எம்.ஏ.சலாம், கோறளைப்பற்று மத்தி மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.நௌபர் மற்றும் பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டடு சிறப்பித்தனர்.
உலக வங்கியின் கல்வி அபிவிருத்தி திட்டத்தில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சினூடாக மூன்று மாடிகளைக் கொண்ட நிறுவாகக் காரியாலயத்துடன் கூடிய வகுப்பறைக்கட்டிடம் அமைப்பதற்கு முதற்கட்டமாக ஐம்பத்தைந்து லட்சம் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய உதவி கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.கே.றஹ்மான் தெரிவித்தார்.