Breaking
Fri. Nov 15th, 2024

– விஜயலட்சுமி பந்தையன் –

“எப்போதும் சிரித்த முகத்தோடு மென்மையாக பேசுவது என் மனைவியின் இயல்பு. ஆனால் இப்போது அவள் என்னிடம் பேசுவதே இல்லை. எப்போதாவது பேசினாலும் எரிந்து விழுகிறாள்… கத்துகிறாள். நான் வீட்டிற்குள் இருக்கும்போதுகூட பெரும்பாலான நேரத்தை அறைக்குள் தனிமையிலே கழித்துக்கொண்டிருக்கிறாள்’’ என்று மனைவி மீது குறைபட்டார், கணவர்.

இவர்களுக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகியிருக்கின்றன. அவருக்கு வயது 40. அவளுக்கு 35 வயது. பத்து வயது மகள் இருக்கிறாள். உற்சாகமாக செயல்பட்டு உலகை புரிந்துகொள்ளவேண்டிய பருவத்தில் இருக்கும் அந்த சிறுமி, தூக்க கலக்கத்தில் இருப்பவளைப்போன்று கண் கண்ணாடியை சரி செய்தபடியே ‘ஐபேடில்’ முழு கவனத்தையும் செலுத்திக்கொண்டிருந்தாள்.

“நான் ஏழைக் குடும்பத்தை சேர்ந்தவன். கஷ்டப்பட்டு வாழ்க்கையில் போராடி, இப்போதுதான் நல்ல நிலைக்கு வந்திருக்கிறோம். கஷ்டப்படும் போதெல்லாம் இவள் என் மீது அன்புகாட்டி ஆதரவாக இருந்தாள். இப்போது வசதி, வாய்ப்பு வந்த நிலையில் இவள் வம்பு செய்கிறாள். இவள் என்னை புரிந்து கொண்டு முன்புபோல் இருந்தால் போதும். அதற்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறேன்’’– என்று உருக்கமாகச் சொன்னார்.

35 வயது பெண்ணிடம் திடீரென்று என்ன மாற்றம் ஏற்பட்டிருக்க முடியும்?!

அமைதியாக இருந்தவள், மெதுவாக வாய் திறந்தாள். அவள் 12–ம் வகுப்புவரை படித்திருக்கிறாள். கிராமத்துப்பெண். அவள் என்னிடம் பேசிக் கொண்டிருந்தபோதே, அவளது செல்போன் ஒலிக்க, அதை வெளியே எடுத்து ‘ஆப்’ செய்து மேஜை மீது வைத்தாள். அது மிக விலை உயர்ந்த போன் என்பதை பார்த்த மாத்திரத்திலே தெரிந்துகொள்ள முடிந்தது.

நான் போனை பார்ப்பதை கவனித்தவள், “எங்களுக்குள் பிரச்சினை ஆரம்பிக்க இந்த போன்தான் காரணம் என்று என் கணவர் எப்போ பார்த்தாலும் குறை சொல்கிறார்..’’ என்று கோபமாக சொன்னாள். அப்போது கணவர்
அமைதியாகிக் கொண்டார்.

அந்த போன் எப்படி கணவன்–மனைவி பிரச்சினைக்கு காரணமாக இருக்க முடியும்? என்ற கோணத்தில் பேச்சை தொடர்ந்தபோது அவளது எல்லை கடந்த பொழுது போக்கை வெளிப்படுத்தினாள்.

அவள் ‘வாட்ஸ் அப்’ மோகத்தில் சிக்கிக்கிடக்கிறாள். தனது பள்ளித் தோழிகள் குரூப், ஊர் தோழிகள் குரூப், மகளின் பள்ளி ஆசிரியைகள் குரூப், அந்த குழந்தைகளின் அம்மாக்கள் குரூப்.. என்று ஏகப்பட்ட வாட்ஸ் அப் குரூப்களில் அவள் இருக்கிறாள்.

‘வாட்ஸ் அப் உனக்கு ரொம்பவும் பிடித்ததுபோல் தெரிகிறதே’ என்றேன். கணவரின் முகத்தை பார்த்துக்கொண்டு அரைகுறையாக தலையசைத்தாள்.

‘காலையில் எத்தனை மணியில் இருந்து அதில் நீ நேரத்தை செலவிடுகிறாய்?’ என்று கேட்டேன்.

‘‘காலை 7 மணிக்கு விழித்து ‘குட்மார்னிங்’ சொல்வதில் ஆரம்பித்து, இரவு 12 மணிக்கு தூங்கச் செல்வதுவரை நாங்கள் அனைவரும் தொடர்பில் இருப்போம்..’’ என்றாள்.

“ஆமாம் சமையல் செய்யும்போதும், மகளை பள்ளிக்கு தயார் செய்யும்போதும் கூட இவள் கவனமெல்லாம் செல்போன் மீதுதான் இருந்துகொண்டிருக்கிறது..’’ என்று கணவர் கவலையோடு சொன்னார்.

இதில் பெரிய வேடிக்கை என்னவென்றால், இவர்களது மகள் இரவு 9 மணிக்கு தூங்கிவிடுவாளாம். கணவர் காத்திருந்து பார்த்துவிட்டு, மனைவியை வாட்ஸ் அப்பில் இருந்து பிரிக்க முடியாமல் 11 மணிக்கு தூங்கிவிடுவாராம். இவள் தோழிகளுக்கெல்லாம் ‘குட்நைட்’ கூறி தூங்க வைத்துவிட்டு படுக்கைக்கு செல்லும் பழக்கத்தை கொண்டிருக்கிறாள். இதனால் கணவன்–மனைவி உறவு சீர்
குலைந்திருக்கிறது. கணவரோடு பேசுவது குறைந்திருக்கிறது. தாய் தன்னை கவனிக்கவில்லை என்ற ஏக்கம் மகளுக்கு ஏற்பட்டபோது, அவளுக்கு விலை உயர்ந்த ‘ஐபேடு’ ஒன்றை வாங்கி கொடுத்திருக்கிறாள். அதுவும் தாய் வழியில் அதிலே பொழுதை கழிக்கத் தொடங்கியிருக்கிறது.

‘தினமும் 15 மணி நேரத்தை வாட்ஸ் அப்பில் செலவிடுகிறாயே! அதனால் உன் குடும்பத்தில் எத்தனை மோசமான விளைவுகள் ஏற்பட்டிருக்கின்றன என்பதை உணர்ந்திருக்கிறாயா?’ என்று நான் அவளிடம் கேட்டபோது கணவர் குறுக்கிட்டு சமீபத்தில் நடந்த சம்பவம் ஒன்றை குறிப்பிட்டார்.

“கோடை சுற்றுலாவுக்கு நாங்கள் வெளிநாடு ஒன்றிற்கு சென்றோம். நான்கு நாட்கள் அங்கு தங்கியிருந்தோம். இவள் முழுநேரமும் வாட்ஸ் அப்பிலே இருந்தாள். என் மகள் ‘ஐபேடில்’ இருந்தாள். சில லட்சங்கள் செலவு செய்து வெளிநாட்டிற்கு போய் அங்கிருந்தும் இதைத்தான் செய்துகொண்டிருந்தார்கள். ஏன்டா வெளிநாட்டிற்கு சென்றோம் என்றாகி விட்டது’’ என்று அவர் சொன்னபோது கேட்கவே கவலையாகத்தான் இருந்தது.

பின்பு அவளிடம் தனியாக பேசவேண்டியதிருந்தது. பரிசோதனை ஒன்றின் மூலம் அவள் மனோநிலையை ஆராய்ந்தபோது கிட்டத்தட்ட அவள் ‘வாட்ஸ் அப்’ அடிமைபோல் ஆகியிருந்தாள். அதனால் அவள் வாழ்க்கையில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளை உணர்த்தி, இனிமேலும் இதே நிலை தொடர்ந்தால் குடும்பம் எப்படி எல்லாம் உலைந்துபோகும் என்பதை எடுத்துச் சொன்னேன்.

இதில் பெரிய சிக்கல் என்னவென்றால், இத்தகைய ‘வாட்ஸ் அப்’ அடிமைகளை உடனடியாக 100 சதவீதம் அதில் இருந்து விடுவிக்க முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக அதில் இருந்து விடுவித்து, பாதிப்பற்ற வேறு பொழுதுபோக்குகளில் அவர்களை திசை திருப்ப வேண்டும். நல்ல பொழுதுபோக்கில் இப்போது அவள் கவனம் திசை திருப்பப்பட்டிருக்கிறது!.

Related Post