எகிப்து முன்னாள் அதிபர் முகம்மது மோர்சி மீது 2011ம் ஆண்டு சிறைக்கைதிகள் தப்பிச் செல்வதற்கு உதவியாக இருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் விதிக்கப்பட்ட மரண தண்டனை இறுதி தீர்ப்பு வரும் 16-ம் தேதி அறிவிக்கப்படும் என கெய்ரோ கோர்ட் தெரிவித்துள்ளது.
எகிப்தில் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட முதல் அதிபர் முகமது மோர்சி(63). முப்பதாண்டுகளுக்கும் மேலாக பதவியில் இருந்த ஹோஸ்னி முபாரக்கை கடந்த 2012 ஆம் ஆண்டில் பதவியிலிருந்து இறக்கிவிட்டு அதிபர் பதவியைப் பிடித்த மோர்சியால் ஓராண்டுக்கு மேல் அந்தப் பதவியில் நீடிக்க முடியவில்லை.
எகிப்தின் ராணுவத் தலைவராக இருந்த அப்டெல் சிசி மோர்சியை பதவியிலிருந்து இறக்கி கைது செய்து சிறையிலும் அடைத்தார். அவர்மீது பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அவருக்குத் துணை புரிந்த முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணையை எதிர்நோக்கி காவலில் உள்ளனர்.
இவர்களில் சுமார் 100 பேருக்கு ஏற்கனவே தனித்தனியாக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில், மோர்சிக்கும் கடந்த மே மாதம் 16-ம் தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து, எகிப்து நாட்டின் சட்டத்தின்படி, அரசாணைகளை வெளியிடும் தலைமை முப்திக்கு இந்த தண்டனை விவரம் அனுப்பப்பட்டது. இந்த தண்டனை தொடர்பாக தலைமை முப்தி ஆய்வு செய்து, கருத்து தெரிவித்த பின்னர் ஜூன் 2-ம் தேதி (இன்று) கெய்ரோ நீதிமன்றம் தனது இறுதி தீர்ப்பை அறிவிக்கும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனவே, மோர்சியின் மரண தண்டனை இன்று ரத்து செய்யப்படும் என அவரது ஆதரவாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில், தலைமை முப்தியின் பரிந்துரை இன்றுதான் நீதிபதியிடம் வந்து சேர்ந்தது. இதையடுத்து, அந்த பரிந்துரையையும், முப்தியின் கருத்தையும் பரிசீலித்து முடிவெடுக்க அவகாசம் தேவைப்படுவதால் இறுதி தீர்ப்பு வரும் 16-ம் தேதி அறிவிக்கப்படும் என நீதிபதி ஷபான் எல் ஷமி தெரிவித்துள்ளார்.