செல்லிடப் பேசி சிம் அட்டைகளைப் பெற்றுக்கொள்ள வதிவிடத்தை உறுதி செய்யும் ஆவணங்களையும் சமர்ப்பிக்கும் வகையில் புதிய முறை அறிமுகம் செய்யப்படவுள்ளது.
செல்லிடப் பேசி சிம் அட்டைகளை போலியான முறையில் பெற்றுக்கொண்டு பல்வேறு குற்றச் செயல்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கில் இந்த புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு பரிவர்த்தனை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதுவரை காலமும் சிம் அட்டை வழங்குவதற்கு தேசிய அடையாள அட்டையின் பிரதி மட்டுமே பெற்றுக்கொள்ளப்பட்டு வந்தது.
இறந்தவர்களின் அடையாள அட்டைகள், காணாமல் போன தேசிய அடையாள அட்டை மற்றம் வாகன சாரதி அனுமதிப்பத்திரம் போன்றவற்றை பயன்படுத்தி சிம் அட்டைகளைப் பெற்றுக் கொண்டு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாக ஆணைக்குழுவின் பிரதிப் பணிப்பாளர் மேனகா எச். பத்திரண தெரிவித்துள்ளார்.
சிம் அட்டைகள் அறிமுகம் செய்யப்பட்ட காலத்தில் வதிவிடத்தை உறுதி செய்ய வேண்டும் என்ற முறைமை காணப்பட்டது.
எனினும், சிம் அட்டைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு இடையிலான போட்டி காரணமாக தற்போது தேசிய அடையாள அட்டையின் பிரதியொன்றுக்கு சிம் அட்டைகள் வழங்கப்படுகின்றன.
தங்களது சிம் அட்டைகளை வேறு ஒர் நபரின் பயன்பாட்டுக்கு வழங்க வேண்டாம் என அவர் பயனாளிகளிடம் கோரியுள்ளார் என சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடத்தல்கள், கொலைகள், போதைப் பொருள் வர்த்தகம் உள்ளிட்ட பாரிய குற்றச் செயல்களுக்கு போலியான முறையில் பெற்றுக்கொள்ளப்பட்ட மூன்றாம் நபர்களின் சிம் அட்டைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.