கண்டி பிரதேசத்தில் தற்போது ஒருவித கண்நோய் தீவிரமாக பரவி வருவதாகவும் இந்நோய் அதிகமாக பாடசாலை மாணவர்களிடமே காணப்படுவதாகவும் கடுகண்ணாவ வைத்தியசாலை அதிகாரி திஸாநாய க்க தெரிவித்தார்.
இதே தகவலை கண்டி பிரதான வைத்தியசாலை உட்பட சுற்றுப்புற வைத்தியசாலை வைத்திய அதிகாரிகளும் தனியார் துறை வைத்தியசாலைகளின் வைத்தியர்களும் தெரிவித்தனர். கடந்த சில தினங்களாக கண்சிவந்த நிலையில் கண்நோயினால் பீடி க்கப்பட்டவர்கள் சிகிச்சைபெற்றுக்கொள்ள வருவதாகவும் இவர்களில் அதிகமாக பாடசாலை மாணவர் மாணவிகளே காணப்படு கின்றனர் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டு கின்றனர்.
அதிகமான பிரயாணங்களின்போதும் பொது இடங்களில் கூடியிருக்கும்போதும் இந்நோய் பரவக்காரணமாக உள்ளது.
கண் சிவப்பது, கபம் வெளியேறுதல், கண்வீக்கம், கண்ணில் நீர் வடிதல், தலைவலி போன்ற அறிகுறிகள் கண்நோயாளர்களிடம் காணப்படும்.
இவ்வாறு கண்நோய் உள்ளவர்கள் தாமதிக்காது அரச வைத்தியசாலைகளில் கண் வைத்தியர்களிடம் சென்று சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என வைத்தியர் திஸாநாயக்க தெரிவித்ததுடன் இந் நோய் சுமார் மூன்று தினங்கள் வரை காணப்படும் எனவும் தெரிவித்தார். அதேவேளை இந்நோய் கண்டவர்கள் தங்கள் உடைகள் கட்டில் விரிப்புகள் மற்றும் பாவிக்கும் பொருட்களை சுத்தமாக கழுவி துப்புரவாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்.