இஸ்ரேலால் அக்கிமிக்கப் பட்ட, பலஸ்தீன பூமியான ஜெரூசலத்தில் பிறந்த அமெரிக்க பிரஜைகளின் பிறந்த இடமாக இஸ்ரேலை ஏற்கும் 2002 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட கடவுச்சீட்டு சட்டம் ஒன்றை அமெரிக்க உச்ச நீதி மன்றம் செல்லுபடியற்றதாக்கியுள்ளது.
அமெரிக்க காங்கிரஸ் அவையால் இந்த சட்டம் நிறைவேற்றப் பட்டபோதும் அது சர்வதேச கொள்கை தொடர்பில் தீர்மானிக்கும் ஜனாதிபதியின் உரிமையை மீறுவதாக நீதிமன்றத்தின் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பலஸ்தீன பூமியான ஜெருசலத்தை, இஸ்ரேலாக அங்கீகரிக்கும் இந்த சட்டத்தை முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் மற்றும் பராக் ஒபாமா அரசுகள் அங்கீகரிக்கவில்லை. ஜெரூசலத்தில் பிறந்த அமெரிக்கர்களின் பிறந்த இடமாக இஸ்ரேலை பதிவு செய்வதை அமெரிக்க இராஜங்கத் திணைக்களம் நிராகரித்து வருகிறது.
பலஸ்தீன பூமியான ஜெரூசலத்தை, இஸ்ரேல் ஆக்கிரமித்து உரிமை கொண்டாடும் நிலையில் அதன் அந்தஸ்து குறித்து சர்ச்சை நிலவி வருகிறது. ஜெரூசலத்தில் பிறந்த 12 வயது அமெரிக்க பிரஜை ஒருவரின் பெற்றோரே இந்த வழக்கை தொடுத்திருந்தனர். தமது குழந்தை இஸ்ரேலில் பிறந்ததாக பதிவு செய்யுமாறு இவர்கள் வாதாடியபோதும் நீதிமன்றம் அதனை நிராகரித்துள்ளது.
சுமார் 50,000 அமெரிக்க பிரஜைகள் ஜெரூசலத்தில் பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.