சமீபத்தில் உலகில் பரபரப்பாக பேசப்பட்ட செய்தி உலகப் புகழ் பெற்ற காற்பந்து போட்டியைக் கொண்டு நடத்தும் சர்வதேச கால்பந்துக் கூட்டமைப்பான FIFA இன் முக்கிய சில உறுப்பினர்களுக்கு தென்னாப்பிரிக்க அரசியல் வாதிகள் 2010 உலகக் கோப்பையைத் தமது நாடு தலைமை தாங்குவதற்கு சார்பாக வாக்களிக்க கோடிக் கணக்கில் இலஞ்சம் அளிக்கப் பட்டதாகக் கசிந்த தகவலாகும்.
இந்த ஊழல் விவகாரத்துடன் தொடர்புடைய சில முக்கிய FIFA அதிகாரிகள் சிலர் கைது செய்யப் பட்டு அவர்கள் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குப் பதிவாகியுள்ளது. இதைவிட எதிர்வரும் 2018 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் உலகக் கோப்பை போட்டிகளை கொண்டு நடத்த உரிமை கோரிய விவகாரத்தில் ரஷ்யா மற்றும் கட்டார் ஆகிய நாடுகள் இலஞ்சம் கொடுத்திருப்பதாகவும் ஊகங்கள் வெளியாகி இருந்ததுடன் இது நிரூபிக்கப் பட்டால் குறித்த நாடுகள் போட்டியை நடத்தும் உரிமையை இழந்து விடும் என்றும் தெரிவிக்கப் பட்டிருந்தது. ஆனால், உலகளாவிய கால்பந்து கூட்டமைப்பான FIFA இறுதியாக திங்கட்கிழமை வெளியிட்ட செய்தியில் 2018 ஆம் ஆண்டு உலகக் கோப்பைப் போட்டியைக் கொண்டு நடத்தும் உரிமையை ரஷ்யாவிடம் இருந்தோ அல்லது 2022 இல் இதனைக் கொண்டு நடத்தக் கூடிய உரிமையை கட்டாரிடம் இருந்தோ பறிப்பதற்கு சட்ட ரீதியாக எந்தவித இடமும் இல்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளது.
இதற்கு முன்னதாக ரஷ்யா மற்றும் கட்டார் விவகாரத்தில் குறித்த விசாரணையை மேற்கொண்டிருந்த சுவிட்சர்லாந்து நாட்டில் வெளியாகும் செய்தி இதழின் ஆசிரியரான டொமெனிக்கோ ஸ்காலா என்பவரே ஆதாரம் நிரூபிக்கப் பட்டால் அவ்விரு நாடுகளும் போட்டியை நடத்தக் கூடிய உரிமையை இழக்கும் எனத் தெரிவித்திருந்தார். மேலும், இதற்கு முன் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் தொடர்புடைய 14 பேரை அமெரிக்கா சுட்டிக் காட்டியிருந்ததுடன் இதில் 9 மூத்த FIFA அதிகாரிகளும் அடங்குகின்றனர். இந்த 9 பேரில் டிரினிடாட் மற்றும் டொபாகோ அரசியல்வாதியும், தொழிலதிபரும் முன்னால் FIFA தலைமை செயலாளருமான ஜேக் வார்னெரும் கைது செய்யப் பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.