சீனாவில் தாயின் கனவை நிறைவேற்ற 3500 கி.மீ. தூரம் வீல்சேரில் அழைத்து சென்றுள்ளார் மகன்.
சீன தலைநகர் பீஜிங்கை சேர்ந்தவர் பான் மெங்க்(வயது 26). இவரது தாய் கோவ் மின்ஜூன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் போனார்.
இதனால் பல ஆண்டுகளாக வீல் சேரில்தான் காலத்தை கழித்து வருகிறார். இவர் யுனான் மாகாணத்தில் உள்ள ஜிஸ்ஹூவாங்பனா பகுதியை சுற்றி பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
ஜிஸ்ஹூவாங்பனா பகுதி இயற்கையின் சொர்க்கமாக விளங்குகிறது. அழகிய பள்ளத்தாக்குகள், தேயிலை தோட்டங்கள், வனவிலங்கு பூங்காக்கள் என ஏராளமான இடங்கள் உள்ளன.
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதால் அந்த கனவு நிறைவேறாது என்று நினைத்தார். ஆனால், 26 வயது மகன் பான் மெங்க், தாயின் கனவை நிறைவேற்ற முடிவெடுத்தார்.
வீல் சேரில் இருக்கும் தாயை பஸ், ரயில், விமானத்தில் அழைத்து செல்வது பெரும் சிக்கலாக இருந்தது. கடைசியில் துணிந்து வீல் சேரிலேயே தாயை அழைத்துக் கொண்டு கிளம்பினார்.
ஒருநாள், இரண்டு நாட்கள் அல்ல.. 100 நாள் பயணத்துக்கு பிறகு அம்மாவும் மகனும் அந்த அற்புத இடத்துக்கு வந்தடைந்தனர்.
ஜிஸ்ஹூவாங்பனா பகுதியின் இயற்கை எழிலை பார்த்ததும், அம்மா கோவ் மின்ஜூனின் கண்ணில் ஆனந்த கண்ணீர். மகன் தன் மீது வைத்திருக்கும் பாசத்தை நினைத்து நெகிழ்ந்தார்.
பயணத்தை தொடங்கிய இவர்களுக்கு, செல்லும் வழியெங்கும் மக்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். நெகிழ்ச்சியுடன் பல உதவிகளை செய்தனர். பான் மெங்குக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.