சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் இலங்கையில் ஒன்றிணைந்த தேசிய கொள்கை வகுக்கப்படுமென ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்ஹ தெரிவித்தார்.
ஜெனீவாவில் ஐ.நா. சபையின் 29 ஆவது அமர்வு ஜூன் மாதம் 15 ஆம் திகதி ஆரம்பமானது. இதில் இலங்கை சார்பில் ஆரம்ப உரையை நிகழ்த்தியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
குடியேற்றகாரர்களை, ஆட்கடத்தல் காரர்களினால் பாதிப்புக்குள்ளானவர்களாக கருதும் இலங்கை அனைத்து சட்டவிரோத குடியேற்றம், ஆட்கடத்தல், கடத்தல் ஆகியவற்றுக்கெதிராக கடுமையான நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.
சட்டவிரோத குடியேற்றம் தொடர்பில் இலங்கை விழிப்புணர்வுடனேயே செயற்பட்டு வருகின்ற போதிலும் அதனுடன் சம்பந்தப்பட்ட விவகாரம் குறித்து சற்று வித்தியாசமாக கையாளும் நோக்கில் ஒன்றிணைந்த தேசிய கொள்கையொன்றை நிறுவ தீர்மானித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இது அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் குடியேற்றவாசிகளுக்கான நலன்புரி செயற்பாடுகளுக்கு மேலதிக சக்தி மற்றும் வளங்களை பெற்றுத் தருவதாக அமையுமெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கைக்கு கடந்த மே மாதம் விஜயம் செய்திருந்த குடியேற்றவாசிகளின் மனித உரிமைகளுக்கான விசேட தூதுவர் பிரான்சிஸ் கிரேப், இலங்கை நிலவரம் தொடர்பில் ஐ.நா.வின் அறிக்கையொன்றை முன்வைத்ததை தொடர்ந்தே இலங்கைக்கான தூதுவர் ரவிநாத் ஆரியசிங்ஹ ஐ.நா.வில் உரையாற்றினார்.
பிரான்சிஸ் கிரேப் மே மாதம் 19 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்தார். இச்சந்தர்ப்பத்தில் அவர் சிவில் சமூக அமைப்புக்கள், வெளிநாடுகளில் வாழ்பவர்களின் குடும்பங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து திரும்பி வந்தவர்கள் ஆகியோரை சந்தித்தார். அவரது விஜயத்திற்கு தேவையான முழுமையான ஒத்துழைப்புக்களையும் இலங்கை அரசாங்கம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.