Breaking
Mon. Dec 23rd, 2024
20ஆவது திருத்தச்சட்டமூலத்தை தாமதப்படுத்தும் எந்த நோக்கமும் அரசாங்கத்துக்கு இல்லை. சகல தரப்பினரதும் அபிப்பிராயங்களைப் பெற்று தேர்தல் மறுசீரமைப்பொன்றுக்குச் செல்லவே 20ஆவது திருத்தம் தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்துகின்றோம்.
இந்த விவாதத்தில் ஆராயப்படும் விடயங்களின் அடிப்படையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி அடுத்த நகர்வுக்குச் செல்லவிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
20ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக பாராளுமன்றத்தில் =நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி அடங்கலாக நாம் அனைவரும் 19ஆவது திருத்தம் அடங்கலான சில விடயங்களை நிறை வேற்றவே ஒன்று சேர்ந்தோம். சுதந்திரக் கட்சி செயலாளரை ஜனாதிபதி வேட் பாளராக நிறுத்தி ஜனாதிபதியாகத் தெரிவுசெய்தோம்.
நான் பிரதமராக இருந்த போதே தேர்தல்மறுசீரமைப்பிற்காக தினேஷ் குணவர்த்தனவின் தலைமையில் 2003ல் குழுவொன்றை நியமித்தேன். இந்தக் குழுவின் அறிக்கை கிடைத்தபோதும் மஹிந்த ராஜபக்ஷ அதனை செயற்படுத்த வில்லை. ஜனாதிபதி முறையை மாற்றவோ தேர்தல் முறையை திருத்தவோ எதுவும் செய்யவில்லை.
ஆனால் நாம் வாக்களித்தவாறு 19ஆவது திருத்தத்தை நிறைவேற்றினோம். 20ஆவது திருத்தத்தை சமர்ப்பிப்பதாக அளித்த வாக்குறுதியின் படி அது குறித்து அமைச்சரவையில் ஆராய்ந்தோம்.
இந்த விடயம் குறித்து ஐ.ம.சு.முவுடன் ஜனாதிபதி பேச்சு நடத்தினார். அதன் பின்னர் சட்டமூலம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது. இது குறித்து மேலும் ஆராயும் நோக்கத்துடன் 20ஆவது திருத்தம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. மக்களுக்கும் இதிலுள்ள விடயங்களை ஆராய இடமளித்துள்ளோம். சகலரதும் இணக்கப்பாட்டுடன் இதனை முன்னெடுப்பதே எமது நோக்கமாகும். ஐ.ம.சு.மு தரப்பிலிருந்து வந்த யோசனைகளையும் உள்ளடக்கியே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தினேஷ் குணவர்த்தன குழுவின் அறிக்கை குறித்தும் ஆராயப்பட வேண்டுமென சில எம்.பிக்கள் கோரியிருந்தனர். நாட்டு மக்களினதும் கருத்துக்களைப் பெற்றே இந்தத் திருத்தத்தை முன்னெடுக்க வேண்டும். சகலரதும் கருத்துக்கள் பெறப்பட வேண்டும் என்பதே ஜனாதிபதியின் தேவையாகும். நல்லாட்சி என்பது சகலரதும் கருத்துக்களைப் பெற்று செயற்படுவதாகும்.
எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கவினால் ஸ்தாபிக்கப்பட்டு கட்டியெழுப்பப்பட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் சிறிமாவோ பண்டாரநாயக்க, சந்திரிக்கா குமாரதுங்க போன்றோரினால் பாதுகாக்கப்பட்டது. எனினும் 2005ஆம் ஆண்டு பிர பாகரனினாலேயே அக்கட்சி பாது காக்கப்பட்டது. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றதும் மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைத்திருந்தால் பேசும் யாரும் இங்கு வந்திருக்க முடியாது.
சுதந்திரக் கட்சியில் மைத்திரிபால சிறிசேனவைத் தலைவராக்கிவிட்டு அவரை அதிலிருந்து நீக்குவதற்கு சிலர் மறைமுகமாக செயற்படுகின்றனர் என்றும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

Related Post