புதிய தேர்தல் முறைமை தொடர்பில் பிரதான கட்சிகளுக்கும் சிறு மற்றும் சிறுபான் மைக் கட்சிகளுக்கும் இடையில் வித்தியாசமான கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன.
எனவே பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து சமூகப் பிரதிநிதிகளின தும் மக்களினதும் கருத்துக்களை அறிய வேண்டிய தேவை ஜனாதிபதிக்கு இருப்பதாலேயே 20ஆவது திருத்தம் தொடர்பில் விவாதிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சபையில் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியானது எஸ். டப்ளியூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவினால் ஸ்தாபிக்கப்பட்டதாகும்.
அக்கட்சியானது பல சந்தர்ப்பங்களில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க மற்றும் சந்திரிக்கா குமாரதுங்க ஆகியோரால் பாதுகாக்கப்பட்டதைப் போன்று 2005ஆம் ஆண்டு புலிகளின் தலைவர் பிரபாகரனாலும் பாதுகாக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற புதிய தேர்தல் முறைமை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு பேசுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரதமர் இங்கு மேலும் கூறுகையில்,
நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிப்பதையும் 17ஆவது திருத்தத்தை மீண்டும் அமுல்படுத்தும் நோக்கிலேயுமே நாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஏற்று செயற்பட்டிருந்தோம். அதேபோன்றுதான் விருப்பு வாக்கு முறையை இல்லாது செய்யும் வகையில் தேர்தல் திருத்தம் ஒன்றை அறிமுகப்படுத்துவதென்றும் இணங்கப்பட்டிருந்தது.
புதிய தேர்தல் முறை மற்றும் 20ஆவது திருத்தம் தொடர்பில் நாட்டு மக்கள் அறிந்துக்கொள்ள வேண்டும் என்ற காரணத்திற்காகவே வர்த்தமானி அறிவித்தல் மூலம் 20ஆவது உத்தேச அரசியல் திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன் இவ்விடயம் தொடர்பில் இப்பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களது நிலைப்பாடுகள் என்ன என்பது தொடர்பிலும் ஜனாதிபதி தெரிந்துக்கொள்ள வேண்டியவராக இருக்கிறார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் விருப்பின் பேரிலேயே 20ஆவது திருத்தம் வெளியிடப்பட்டுள்ளது. மாறாக இது எனது விருப்பின் பேரில் அல்ல. அந்த வகையிலேயே யோகராஜன் எம்.பியினால் முன்வைக்கப்பட்டுள்ளதான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையும் அமைந்திருக்கின்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை ஸ்தாபித்த எஸ்.டப்ளியூ.ஆர்.டி.பண்டாரநாயக்க தமது சொத்துக்களை விற்று தேர்தலில் குதித்து தமது கட்சியை பாதுகாத்தது போன்று பிற்காலத்தில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க சு.க.வை காப்பாற்றினார்.
அதேபோன்று சு.க. பிளவுப்பட்டு கிடந்த 1977ஆம் ஆண்டின் பின்னரான காலப்பகுதியில் 1994இல் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கட்டிக்காத்தார். ஆனாலும் 2005ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுதந்திரக்கட்சியை பிரபாகரனே காப்பாற்றினார். அன்று தமிழ் மக்களை வாக்களிக்க விட்டிருந்தால் மஹிந்த ராஜபக் ஷ அன்றே தோல்விக்கண்டிருப்பார்.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றி பெற்றதும் பாராளுமன்றத்தை கலைத்திருந்தால் இங்கு யாரும் இருந்திருக்க மாட்டார்கள். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சு.க.வின் தலைவராக்கி விட்டு அவரை தற்போது அப்பதவியிலிருந்து நீக்கிவிடுவதற்கே சுதந்திரக்கட்சியினர் செயற்பட்டு வருகின்றனர்.
ஜனாதிபதியின் முன்னெடுப்புக்களுக்கு அவரது கட்சியை சேர்ந்தவரும் எதிர்க்கட்சித் தலைவருமான நிமல் சிறிபாலடி சில்வா ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டும்.
20ஆவது திருத்தம் எனப்படுகின்றதான புதிய தேர்தல் முறைமையை மாற்றியமைக்க வேண்டுமென்ற தேவை சு.க.வுக்கு இருந்திருப்பின் அதனை மூன்றில் இரண்டு பெரும்பான்மையினர் கொண்டிருந்த முன்னைய அரசாங்கம் செய்திருக்க வேண்டும். ஆனால் அது இடம்பெறவில்லை. வெறுமனே இன்று எம் மீது குறைகூற முடியாது. எம்மை பொறுத்தவரையில் நாம் இந்நாட்டின் அனைத்து சமூகத்தினரையும் அரவணைத்து செயற்பட்டு வருகின்றோம் என்றார்.