மக்கள் நண்பன் – சம்மாந்துறை அன்சார்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசை மக்கள் தோற்கடித்தமைக்கு மிகப் பிரதான காரணம் பொதுபலசேனா போன்ற சிங்கள இனவாத குழுக்ககள்தான் என்றால் அது மிகையாகாது.
பொதுபலசேனா அமைப்பினர் மிக கூரிய விஷப் பற்களோடு அன்று முஸ்லிம்களுக்கு எதிராக ஆயிரம் அட்டுழியங்களை செய்தார்கள் ஹலால், ஹிஜாப் என்று தொடங்கி அவர்களது அட்டுழியங்களை கடைசியில் அளுத்கமையில் கொண்டு போய் முடித்தார்கள். அளுத்கமையில் முஸ்லிம்கள் பட்ட இன்னல்கள் கொஞ்சமல்ல இன்னும் பழைய நிலைக்கு திரும்பாத நிலையிலேயே அளுத்கம மக்களது இருக்கின்றார்கள்.
பொதுபலசேனாவின் இனக்குரோத செயற்பாடுகளை தட்டிக் கேட்கச் சொல்லி முஸ்லிம் சமூகம் முன்னால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசிடம் மண்டியிட்டார்கள், முஸ்லிம் அமைச்சர்களும், பாராளுமன்ற உறுப்பினர்களும் பேச்சுவார்த்தை நடாத்தினார்கள் ஆனால் ராஜபக்ஷவோ முதல்வன் திரைப்பட வில்லன் ரகுவரன் போல் “அவங்களாகவே கத்திக்கிட்டு அடங்கிடுவாங்கையா“ என்ற முறையில் கண்டும் காணாமலும் இருந்து விட்டார். கடைசியில் தேர்தலும் வந்தது ஆட்சியும் அப்படியே கவிழ்ந்தது இல்லை கவிழ்க்கப்பட்டது.
கடந்த ஜனவரி 8ம் திகதிக்குப் பின்னர் கௌரவ மைத்திரிபால சிறிசேனா வந்தார், மறுமலர்ச்சி தந்தார் இதனால் முஸ்லிம்களுக்கு ஒரு நம்பிக்கை பிறந்தது. மைத்திரிபாலவின் தேர்தல் வாக்குறுதிகளிலும், கொள்கைளிலும் இந் நாட்டு மக்கள் யாவரும் ஒன்று, இங்கு இனமத பேதங்களுக்கு இடமில்லை என்றார் இது இன்னும் முஸ்லிம்களுக்கும் ஏனைய சிறுபான்மையின மக்களுக்கும் தேனான செய்தியாக இருந்தது. கௌரவ மைத்திரிபால சிறிசேனாவின் வெற்றிக்குப் பிறகு சிறிது காலம் பொதுபலசேனா போன்ற இனவாத அமைப்புக்கள் கொஞ்சம் அடங்கித்தான் கிடந்தார்கள் ஆனால் தற்போது மீண்டும் தங்களது விஷப் பற்களை மாட்டிக் கொண்டு வங்கி என்றும், இந்துக் கோயில்கள் என்றும் பாம்புகள் போல் “உஷ்…உஷ்“ என்று ஊந்து திரிகின்றார்கள்.
இவர்களது இந்த சீறல்கள் நல்லாட்சியிலும் முளைவிட ஆரம்பித்திருப்பதை நினைத்தால் சென்ற ஆட்சியில் இடம்பெற்ற அளுத்கம சம்பவம் நினைக்கு வந்து வந்து போகின்றது.
பொதுபலசேனா அமைப்பினர் முஸ்லிம்களின் விடயத்தில் கை வைக்காத விடயமே இல்லை எனலாம் அந்த அளவுக்கு முஸ்லிம்களின் மத, கலாச்சாரம் போன்ற அத்தனை விடயங்களிலும் கை வைத்து விட்டார்கள். இறுதியில் பர்மாவில் உள்ள முஸ்லிம்களை அந்நாட்டு அரசு அடித்துத் துரத்துவதைப் போல் இலங்கை முஸ்லி்ங்களையும் அடித்துத் துரத்துவதே இவர்களது இறுதி இலக்காகும் இதுதான் அவர்களது செயற்பாடுகளின் நேரடி நோக்கமாகும்.
இலங்கையில் உள்ள சிறுபான்மை முஸ்லிம்கள் மீது இனவாத விஷங்களை கக்கி விட்டு களைப்பின காரணமாக வெளிநாடு ஒன்றுக்கு ஓய்வுக்குச் சென்று மீண்டும் வந்து இந்த நல்லாட்சியிலும் விஷப்பற்களோடுதான் திரிகின்றார் பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரர். இவர் தற்போது கையில் எடுத்திருக்கும் விடயம் இஸ்லாமிய வங்கி முறை. இஸ்லாமிய வங்கி முறைமை இந்த நாட்டுக்கு அவசியமில்லாதது, அதனால் பிரிவினைவாதம் விதைக்கப்படுகின்றது என்று கூறி அதனை இல்லாதொழிக்கும் முகமாக அது தொடர்பாக கலந்துரையாட இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் அர்ஜின் மகேந்திரனை சந்திக்கச் சென்று முடியாத பட்சத்தில் பிரதி ஆளுனர் வீரசிங்கவுடன் இஸ்லாமிய வங்கிமுறைமை தொடர்பாக கலந்தாலோசித்து விட்டு வந்திருக்கின்றார்கள்.
இந்த நாட்டின் அரசியல் சட்டத்தில் சிறுபான்மை இனங்களான தமிழ், முஸ்லிம் மற்றும் கிரிஸ்தவ மக்கள் தங்களது மதம் சார்ந்த சில சட்டதிட்டங்களை அவர்களது மத அடிப்படையில் பின்பற்ற அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் முஸ்லிம்களுக்கும் விவாகச் சட்டம், இஸ்லாமிய வங்கிமுறைமை, மத அனுஸ்டானம் போன்ற பல விடயங்களை பின்பற்ற அரசியல் சட்டத்தில் ஏலவே உரிமையும், சுதந்திரமும் வழங்கப்பட்டுள்ளது அந்த அடிப்படையில் நாம் எமது உரிமைகளையும், சுதந்திரங்களை பின்பற்றுவதை தடுக்க இவர்கள் யார்…???
முஸ்லிம்கள் விடயத்தில் மாத்திரமல்லாமல் மாற்றுமத சகோதரர்களான இந்துக்கள் விடயத்திலும் கிரிஸ்தவர்கள் விடயத்திலும் பொதுபலசேனா கை வைக்காமலில்லை அண்மையில் பொதுபலசேனாவின் செயலாளர் ஞானசார தேரர் குறிப்பிடுகையில் வெள்ளவத்தை முதல் யாழ்ப்பாணம் வரையான கோயில்களை இல்லாதொழிக்க எங்களுக்கு தேவைக்கு அதிகமான அளவு சக்தியுள்ளது என்று அகங்காரத்தோடும், அகோர இனவாதத்தோடும் ஒரு கருத்தை தெரிவித்திருந்தார் இது எவ்வளவு பெரிய ஒரு கண்டிக்கத்தக்க விடயம்.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிகக்காலத்தில் இவர்களால் அரங்கேற்றப்பட்ட Part – 1 இனவாதம் முடிந்த பிறகு தற்போது மைத்திரிபாலவின் நல்லாட்சியில் தங்களது Part – 2 இனவாத நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார்கள் இவர்களது முஸ்லிம்கள் மீதான தொடர்ச்சியான இனவாத செயற்பாடுகளை ஆரம்பத்திலிருந்தே தடுக்க வேண்டும் இது இன்றைய நல்லாட்சி அரசினதும் அந்த அரசுக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் தலைமைகளதும், சிறுபான்மைக் கட்சிகளதும் பாரிய பொறுப்பாகும்.
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலிலும் பொதுபலசேனா அமைப்பினர் BJP “அறிவார்ந்த மக்கள் முன்னணி“ என்ற பெயரில் தேர்தலில் குதிக்க தங்கள் பணிகளை ஆரம்பித்திருப்பதும் இங்கு சுட்டிக் காட்டத் தக்கது.