Breaking
Tue. Dec 24th, 2024

பல்தேசிய நிறுவனமான Coca-Cola நிறுவனத்தின் ஊடாக இலங்கை அரசாங்கத்திற்கு கடுமையான அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறது.

கடுவலை பிரதேசத்திலுள்ள Coca-Cola நிறுவன தொழிற்சாலையின் சுரங்க எண்ணெய் விநியோகக் குழாயில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சுற்றுச்சூழலுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் மத்திய அரசாங்கத்தின் சுற்றுச்சூழல் அதிகார சபை Coca-Cola நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனுமதிப் பத்திரத்தை இரத்துச் செய்துள்ளது.

அத்துடன் சுமார் ஒரு பில்லியன் ரூபா வரையில் அபராதமும் விதித்துள்ளது.

சுற்றுச்சூழல் அதிகார சபையின் அதிகாரிகளின் இந்த அதிரடி நடவடிக்கையினால் குழப்பமடைந்துள்ள Coca-Cola நிறுவனத்தினர் தற்போது மத்திய அரசாங்கத்திற்கு கடுமையான அழுத்தங்களைக் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

குறிப்பாக அமெரிக்கா அதிகாரிகளின் ஊடாக இந்த அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இலங்கைக்கான அமெரிக்கத் தூதரக அதிகாரியொருவர் இலங்கை அதிகாரிகளை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக அபராதத் தொகையைக் குறைக்குமாறு இவர்கள் அழுத்தம் கொடுப்பதாகவே இலங்கை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சுற்றுச் சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பிற்கான அனைத்து ஆதாரங்களும் இருப்பதனால் அபராதத் தொகையைக் குறைக்க முடியாது என அதிகாரிகள் உறுதியாக உள்ளனர்.

எனினும், ஏற்பட்ட பாதிப்பை சீர் செய்துள்ளதாக Coca-Cola நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்படுவதனால் அபராதத் தொகையைக் குறைக்குமாறு அமெரிக்க அதிகாரிகளின் ஊடாக கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகிறன.

Related Post