துபாய் ரமழான் பேரவையின் நிகழ்ச்சியில் இஸ்லாமிய பேச்சாளர் டாக்டர் ஜாகிர் நாயக் கலந்து கொண்டு சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர்களும், முஸ்லிம் அல்லாதவர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மேலும், 6 பேர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர்.
துபாய் ரமழான் பேரவையின் சார்பில் 14வது ஆண்டாக நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிகழ்ச்சிகள் துபாய் சுற்றுலா மற்றும் வர்த்தக மார்க்கெட்டிங்க் துறை முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் அறக்கட்டளையின் தலைவர் ஷேக் அகமது பின் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம் ஆதரவுடன் நடத்தப்பட்டு வருகின்றன.
டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள் நமது வாழ்க்கையின் நோக்கம் என்ன? என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார். இதில் திருக்குர்ஆனின் வசனங்களில் இருந்து விரிவாக சொற்பொழிவு ஆற்றினார். அவர் தனது உரையில் அல்லாஹ் மனிதர்களை தன்னை வணங்குவதற்காகவே படைத்தான். எனவே மனித வர்க்கத்தின் முக்கிய நோக்கமானது இறைவனை வணங்குவதும், அவன் வழியில் சேவை புரிவதுமே ஆகும். இதன் மூலம் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது, வசதியற்றோருக்கு உதவிகளை வணங்குவது, நோன்பு நோற்பது, வசதியுள்ளவர்கள் வாழ்வில் ஒரு முறையாவது புனித ஹஜ் பயணம் மேற்கொள்வது முதலியவற்றை மேற்கொள்ள வேண்டும்.
திருடுவது, பொய் சொல்லுவது, ஏமாற்றுவது, சாராயம் குடிப்பது, பன்றி இறைச்சியை உண்பது, விபச்சாரத்தில் ஈடுபடுவது உள்ளிட்டவை தடுக்கப்பட்டுள்ளது.
மனிதன் இறைவனை வணங்குவதன் நோக்கத்தை தெரிந்து கொண்டு அதன்படி இஸ்லாமிய முறையிலான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.
அதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கேட்ட கேள்விகளுக்கு டாக்டர் ஜாகிர் நாயக் பதிலளித்தார். நிகழ்ச்சியின் இறுதியில் 4 பெண்களும், 2 ஆண்களும் இஸ்லாமிய மார்க்கத்தை டாக்டர் ஜாகிர் நாயக் முன்னிலையில் ஏற்றுக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இஸ்லாமியர்களும், முஸ்லிம் அல்லாதவர்கள் உள்ளிட்டஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.