Breaking
Sun. Dec 22nd, 2024

Ash Sheikh M Z M Shafeek ( Bahji, Mazaahiri)

அன்பார்ந்த நண்பர்களே, அருமைச் சகோதரர்களே !

ரமழானை மிகவும் நெருங்கி வந்திருக்கும் நாம் எமது Facebook, WhatsApp, Viber, Twitter, Telegram … உள்ளிட்ட சமூக இணையத் தளங்களுக்கு முழுக்குப் போட வேண்டிய அல்லது அந்த அனைத்து வகையான இணையத் தளங்களுக்குமாக ஒரு நாளில் மொத்தம் ஒரு மணி நேரமோ ஒன்றரை மணி நேரமோ மட்டும் ஒதுக்கி அதனையும் பொழுது போக்குக்காகவோ அரட்டைக்காகவோ இன்றி தஹ்வாவுக்காக மட்டும் உபயோகிக்கும் பழக்கத்தை கொண்டு வரவேண்டிய கட்டாயத்திலே இருக்கின்றோம்.

நல்லதைத் தானே செய்கின்றோம் என்ற போர்வையில் எமது மேலான ஜன்னத்தை தயார்படுத்திக் கொள்ள வேண்டிய புனித மிக்க ரமழான் மாதத்திலும் எத்தனையோ நற்காரியங்களை செய்ய விடாது இந்த இணையத் தளங்கள் எம்மை தம் முன்னே மண்டியிடச் செய்து விடக் கூடும். சும்மா ஒரு தடவை Mail Box ஐ Check பண்ணி விட்டு எழும்புவோமே என உட்காருவீர்கள். குறித்த இணையத் தளங்கள் உங்கள் 04, 05 மணிநேரத்தை அப்படியே விழுங்கி இருக்கும். இதுதான் உண்மை. இதுவே யதார்த்தம்.

ஆகவே எமது நேரங்கள் சரியாக திட்டமிடப் படாவிட்டால் கண்டிப்பாக இந்த ராமழானும் அவ்வாறே தான் பாழ்பட்டுப் போகும். குர்ஆனுடனான தொடர்பை பலப் படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்துவோம். வழமையாக ராமழான்களை குர்ஆனை ஓதுவதற்கு மட்டும் திறந்த நாம் இம்முறை சற்று வித்தியாசமாக

(01) ஓதுவதற்கு
(02) குர்ஆனின் மொழிபெயர்ப்பை ஆரம்பத்தில் இருந்தே அடையாளம் வைத்து வைத்து வாசிப்பதற்கு

* தற்போது குர்ஆனின் பல மொழிபெயர்ப்புக்கள் உலாவிக் கொண்டிருக்கின்றன. மிகவும் நம்பிக்கைக்குரியவர்களால் மொழிபெயர்க்கப் பட்ட மொழிபெயர்ப்புக்களை மட்டும் தவாராது வாசித்து வாருங்கள். அதன் இன்பமே அலாதியாக இருக்கும். எமது றப்போடு முனாஜாத் செய்கின்ற ஒரு ஆத்ம திருப்தி அதிலே இருக்கின்றது.
(பல நூறு தடவை குர்ஆனை ஓதி முடித்த எம்மில் பலர் இன்னும் ஒருதடவை கூட தர்ஜமத்துல் குர்ஆனை வாசித்து முடிக்கும் பாக்கியம் அற்றவர்களாக இருப்பது கவலைக்குரியதே)
எம்மை படைத்த ரப்பு எம்முடன் என்ன பேச விளைகின்றான் என்பதை அறிய நாம் இன்னும் தயாராக வில்லையா ?

(03) சிறிய சூராக்களை மனனமிடுவதற்கு
(04) மனனமிட்ட சூராக்களை மீட்டுவதற்கு
(05) உலமாக்களால் நடத்தப் படுகின்ற குர்ஆன் விரிவுரை ( தப்ஸீர்) வகுப்புக்களில் போய் அமர்வதற்கு
(06) குரானை மேலும் அழகுற, தஜ்வீதுடன் ஓதுவதற்கான வகுப்புகளை உலமாக்களால் ஒழுங்கு செய்வித்து அங்கே போய் அப் பாட திட்டத்தை நிறைவு செய்வதற்கு

பாருங்கள் ! குர்ஆனுடைய விடையத்தில் மாத்திரம் சற்று வித்தியாசமாக கவனத்தை செலுத்தும் போதே எத்தனை எத்தனை வகையான பிரயோசனன்களை அடைந்து கொள்ளலாம்.

அப்படியாயின் எமது முழு ராமழானையும் திட்டமிடுவோமாக இருந்தால் அதன் அடைவு எவ்வாறாக இருக்கும் ?

வரக்கூடிய ரமழானை எவ்வாறேனும் என்னை சுவர்கத்தில் கொண்டு போய் அமர வைக்கின்ற ராமழானாக மாற்றுவேன் என்ற கங்கணத்தோடு ( குறிப்பாக திட்டமிடலோடு) இந்த ரமழானை எதிர் நோக்குவோம்.

சென்ற வருடங்களில் போன்று இவ்வருடமும் ரமழானை முழுமையாக உயிர்பிப்பதற்கான ஒரு சிறந்த அட்டவனையை வெளியிட தயார் நிலையில் இருக்கின்றோம். இன்ஷா அல்லாஹ் வரக்கூடிய வாரம் எதிர் பாருங்கள்.

ஜஸாக்குமுள்ளாஹ்.

Related Post